மட்டக்களப்பு பிரதேச வைத்தியசாலைகளும் வைத்தியர்களும்.மனம் திறந்தார் டாக்டர் திவ்யன்.

மட்டக்களப்பு பிரதேச வைத்தியசாலைகளும் வைத்தியர்களும் நிகழ்த்துவதாக கூறி சாடப்படும் தொழில்சார் முறைகேடுகளை சமூகவலைத்தளங்களில், பிரதானமாக முகப்புத்தகத்தில் அவ்வப்போது போலிஅடடையாள கணக்குகளை கொண்ட சிலர் பதிவிடுவதும் அதை மிகவும் ஆதரித்து பொதுமக்களில் சிலரும் எதிர்த்து வைத்தியர்கள் சிலரும் கருத்திட்டு மோதிக்கொள்வதும் சமீப காலங்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் கடந்த சில தினங்களாக இவ்வாறான பதிவுகள் அதிகமாகவும் மிகவும் தரம் தாழ்ந்தும் பதிவிடப்பட்டுக்கொண்டிருப்பதை காணமுடிகின்றது என டாக்டர் திவ்யன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு விரிவாக விளக்கமளித்துள்ளார்.

ஒரு குறித்த துறையின் சேவையின், சேவை வழங்குனர்களின் குறைபாடுகளை/ முறைகேடுகளை முறையிடுவதற்கென சட்டரீதியிலான பல வழிகளிருந்தும் சமூகவலைதளங்களில் இது தொடர்பில் பதிவேற்றங்களை செய்வதால் உண்மையில் ஏற்படக்கூடிய பாதகங்கள் பற்றி பதிவேற்றுவோரும், பதிவேற்றுவோரை ஆதரிப்போரும், இப்பதிவுகளில் பங்கெடுக்காதது போல் இருந்து கொண்டு உளமார மகிழ்ச்சியடைவோரும், இப்பதிவுகளை சாதாரணமாக கருதி கடந்து செல்வோரும் சற்று சிந்திக்க வேண்டும்.

ஒரு முறைகேடு பற்றிய தகவலை வலைதளங்களில் பதிவேற்றுவதினால் குறித்த முறைகேடு சம்பந்தமான பதிவுகளையும், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சில புகைபடங்களையும் அடிப்படையாக கொண்டு எந்தவொரு சேவை வழங்குனரையும் சட்டமோ மேலதிகாரிகளோ விசாரணை செய்ய, தண்டிக்க முடியாது. மாறாக இது போன்ற பதிவுகளை நம்பி அவற்றின்பால் ஈர்க்கப்படுகின்ற பலரும் தாங்கள் எதிர்கொள்ளக்கூடிய சிறிய அசௌகரியங்களுக்கு கூட கூடுதல் அர்த்தங்களை கற்பித்துக்கொண்டு குறித்த சேவைநிலையங்களில் முரண்படும் நிலையே அதிகரித்துள்ளது. மேலும் இப்பதிவுகளில் வழங்கப்படும் தகவல்கள் நம்பகத்தன்மையற்றவை மட்டுமல்லாது பல புனைவுகளையும் கொண்டதாகவே உள்ளன. காரணம் இவை அங்கீகரிக்கப்படாத, குறித்த சேவை தொடர்பான சாதாரண நடைமுறை பற்றிய போதிய அறிவில்லாத, குறித்த முறைகேட்டில் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு சில தனி நபர்களால் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற வதந்திகளை அடிப்படையாக கொண்டும், முறைகேட்டில் சம்மந்தப்பட்ட இருசாராரின் விசாரணை விளக்கங்களின்றியும் பதிவிடப்படுகின்றன. மேலும் இப்பதிவேற்றல்கள் குறித்த சேவை வழங்குனர்களின் மேல் தங்களுக்கு ஏற்கனவே உள்ள பொருளாதார, கல்வி தகமை தொடர்பான காழ்புணர்வுகளை மேற்கோள் காட்டி மிக இழிவுநிலை சொற், பொருட் பிரயோகங்களுடன் பதிவிடப்படுகின்றன. இப்பதிவுகளின் நம்பகமற்றதன்மையை இவை போலி கணக்குகளிலிருந்து பதிவிடப்படுவதிலிருந்து இலகுவில் புரிந்துகொள்ள முடியும். இப்பதிவுகளில் சிலவற்றை உதாரணமாக கொண்டு இதன் பாதகங்களை விளங்கிகொள்ளலாம்.

அரசாங்க வைத்தியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சென்று பெரும் பொருளீட்டுவதாகவும், ஆகையால் பொதுவைத்தியசாலைகளில் வைத்திய சேவைகளை புறக்கணிப்பதாகவும் சில பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உண்மையில் வைத்தியநிபுணர்களும் (விதிவிலக்குகளுமுண்டு) அரசாங்க வைத்திய அதிகாரி தரத்திலுள்ள வைத்தியர்களில் சொற்பமான சிலரருமே தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கை இலங்கை வைத்தியர்களின் மொத்த தொகையில் சிறியதொரு பங்காகும். அந்த சொற்பத்தில் வெகு சிலரால் மாத்திரமே ஓரளவுக்கு பொருளீட்ட முடியுமென்பதே யாதர்த்தமான உண்மை. மேலும் அரச, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கான சில சட்டதிட்டங்களை கடைப்பிடித்தே இவற்றை செய்ய முடியுமென்பதால் அரச பணிகளை புறந்தள்ளிவிடவோ, தனியார் பணிகளில் முழுநேரமாக ஈடுபடுவதோ சாத்தியமில்லை.
எனினும் இது போன்ற பதிவுகள் ஒருபுறம் தம்பணிகளை செவ்வனே செய்யும் வைத்தியர்களை சொர்வடையச்செய்வதாயும் சீண்டுவதாயும் அமைந்து விடுகின்றது. மறுபுறம் பொது வைத்தியசாலைகளை நம்பி சேவை பெறக்கூடிய மக்களிடத்தில் இச்சேவை தொடர்பான வீண் ஐயப்பாடுகளை ஏற்படுத்தி, விளைவாக மக்கள் தனியார் வைத்தியசாலைகளை நாடுவதை மட்டுமே அதிகரிக்க செய்கின்றன.

வைத்தியசாலைகளில் நடைபெறக்கூடிய அனைத்து மரணங்களையும் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக நிகழ்வதாக கூறி சில பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நோய்நிலமையின் சிகிச்சை பலனானது நோயாளி நோயின் எந்த கட்டத்தில் வைத்தியசாலையை அணுகுகிறார், நோய்க்கெதிராக அவரின் உடலின் எதிர்க்கும் தன்மை, நோய் காரணியின் உக்கிரதன்மை, மேலதிகமாக அவரை பீடித்திருக்க கூடிய தொடர்நோய்கள் (chronic diseases) போன்ற பல்வேறு நோயியல் காரணிகளிலும் தங்கியுள்ளது. மேலும் சிகிச்சையின் வினைதிறன் சுகாதார அமைச்சினால் கொள்வனவு செய்யப்படக்கூடிய மருந்துகள் தொடங்கி ஏனைய சுகாதார ஊழியர்களின் ஒன்றிணைந்த சேவை வரையிலும் தங்கியிருக்கும் பட்சத்தில் இறப்பிற்கு வைத்தியர்களே சில சந்தர்பங்களில் சாடப்படுகின்றமை அபத்தமானது.
இதுபோன்ற பதிவுகளும் அவற்றுக்கு ஆதரவளிக்கும் பின்னூட்டங்களும் நோயியல் தொடர்பான அடிப்படை அறிவானது எம்பிரதேச மக்களிடம் மிக குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டுவதுடன் இவ் அறிவை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன.

வைத்தியர்களை சேவை அடிப்படையில் வேலை செய்ய வலியுறுத்தியும், அதற்காகவே அரசாங்க வரிபணத்தில் அவர்களுக்கான கல்வி வழங்கப்படுவதாகவும் கூறி சில பதிவுகளை காணமுடிகிறது.
இலங்கையில் சுகாதாரம் சேவையடிப்படையில் இலவசமாக வழங்கப்படுவது உண்மை. எனினும் சுகாதாரம் சேவையாக வழங்கப்படுவதற்கும் அச்சேவைகளை வழங்குவதற்காக ஊதியம் வழங்கப்பட்டு தொழில்ரீதியில் வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய சுகாதார ஊழியர்கள் வேலைக்கமர்த்தப்படுவதற்குமான வேறுபாட்டை இன்னும் பலர் புரிந்து கொள்ளவில்லை. அத்துடன் இலங்கையில் அரச பல்கலைகழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்க வரிப்பணத்தின் ஒரு பகுதியை கொண்டு அமைக்கப்படுவதாய் இருக்க வைத்தியகல்விக்கான செலவீனங்களை மட்டும் சுட்டிகாட்டி கருத்து பதிவிடுவது பதிவாளர்களின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடே என்பதை உணரமுடிகிறது.

வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற திருட்டு பற்றிய பதிவுகளில் அதை நிகழ்த்தியது மருத்துவரெனவும், வைத்தியசாலைகள் திருட்டுக்கு துணை போனதாகவும், ஒட்டு மொத்த வைத்தியர்களும் திருடர்கள் எனும் தொனியிலும் பல கருத்தாடல்கள் இடம்பெற்றிருந்தன.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் காணொளியில் அவர் கூறக்கூடிய அடையாளங்கள் ஒரு வைத்தியருக்கானவை அல்ல, மாறாக ஒரு மருத்துவ மாணவிக்கான அடையாளங்களேயாகும். இத்திருட்டை நிகழ்த்தியவரை இன்னமும் இனங்கண்டுகொள்ளாநிலையில் இவ் அடையாளங்களை மட்டும் வைத்துக்கொண்டு வைத்தியர்களை திருட்டுடன் சம்மந்தப்படுத்தி தரக்குறைவாக பதிவிடுவது ஆரோக்கியமானதல்ல. இது தொடர்பில் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டு விசாரணைகள் முறைப்படி துவக்கப்பட்ட நிலையில் இவ்வாறான பதிவுகள் இயன்றவரை சந்தர்பத்தை பயன்படுத்தி வைத்தியர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே பதியப்படுகின்றன. அவ்வாறே இச்செயல் ஒரு மருத்துவ மாணவியால் நிகழ்த்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென வைத்தியர்கள் பலரும் கருதுவதோடு சிலர் இதை பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் அவ்வாறான பதிவுகள் மக்களை வெகுவாக சென்றடையவில்லையென்பது வருத்ததிற்குரிய விடயமாகும்.

வைத்தியசாலைகளில் நடைபெறுவதாக நீங்கள் கருதக்கூடிய அசௌகரியங்களை, முறைகேடுகளை மிகவும் தரம் தாழ்ந்த சொற்பிரயோகங்களை கொண்டு பதிவிடுவது, அதற்கு எதிர்கருத்திடும் வைத்தியர்களை ஒருமையில் தகதா வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, உறவுகளை முக்கியமாக பெண் உறவுகளை புகைப்படமிட்டு கண்ணியமற்ற முறையில் வசைபாடுவது என்பனவும் முகபுத்தகத்தில் சில தினங்களாக நடைபெற தொடங்கியிருக்கின்றன.
சமூகத்தின்பால் கொண்ட அக்கறை எனும் போர்வையில் இப்பதிவுகளை மேற்கண்டவாறு தரம் தாழ்ந்து செய்வதனால் நீங்கள் சமூகத்திற்கு செய்யக்கூடிய தீங்குகள் பற்றி சற்று கவனத்தில் கொள்ளவும்.

வைத்தியசாலையை பொறுத்த வரையில் வேறு மாவட்டங்களை பிறப்பிடமாக கொண்ட, வேறு மொழி பேசுகின்ற வைத்தியர்கள், தாதியர், அதிகாரிகள் மற்றும் பல ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். உங்களின் இவ்வாறான கீழ் நிலை பதிவேற்றங்களை அவர்கள் பார்க, கேட்க நேரிடும் போது, சிலரே இவ்வாறு செய்திருப்பினும், ஒட்டுமொத்த இப்பிரதேச மக்களின் பண்பு, நடத்தை பற்றிய பிரதிபலிப்பு அவர்கள் பிரதேசங்களை எவ்வாறு சென்றடையுமென நினைக்கிறீர்கள்?
இவற்றை கண்டு மனவுளைச்சலுக்குள்ளாகி மாற்றிடம் கோரி பல வைத்தியர்கள் செல்ல விளையின், இப்பிரதேச வைத்தியசாலைகளுக்கு புதிய விசேட வைத்திய நிபுணர்களோ, வைத்தியர்களோ வர மறுப்பின் அது இப்பிரதேசத்துக்கு வளமிக்கதாக அமையுமா என சிந்தியுங்கள்.
இவ்வாறான பதிவுகளை மேற்கொள்வதனால் எமக்கு பண்புகளை கற்று தந்த தாய், தந்தை, ஆசான்கள், இப்பிரதேச கலாச்சாரம் என்பவற்றை அவமதிப்பது மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினருக்கு மிக மோசமான முன்னுதாரணமாக அமைந்து அவர்கள் போக்கையும் பாதாளத்தில் தள்ளிவிட இருப்பதை உணருங்கள். நாளை தனிப்பட்ட, குடும்ப, நட்புகளுக்கிடையான கருத்து வேறுபாடுகளுக்காக கூட நம் அடுத்த தலைமுறையினர் இது போன்ற யுக்திகளை இன்னும் கேவலமான முறைகளில் கையாள்வதற்கான அடிதளத்தை இட்டுக்கொடுத்த பெருமை உங்களையே சாரும்..