கொழும்பு அரசியல் செல்வாக்குடன் குடியேற்றம் செய்யும் நேக்கில் மட்டக்களப்பில் காடுகள் தீயிட்டு அழிப்பு- மக்கள் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுவளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாக இல்ங்கை வனவள இலாகாபகுதியினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கொழும்பு- மட்டக்களப்பு ஏ4 பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள காடுகளுக்கு இனம் தெரியாத நபர்கள் தீமூட்டியுள்ளனர். இலங்கையின் காட்டுவளத்தை 37 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மைத்திரி- ரணில் அரசாங்கம் தெரிவித்துவரும் நிலையில், மட்டக்களப்பில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சியுடன் கூடிய காற்று வீசுகின்றது. இதனால் விசமிகள் காடுகளுக்குத் தீ வைப்பதற்கு ஏற்ற முறையில் காலநிலை மாற்றமும் உகந்ததாகவுள்ளது.

இது தொடர்பாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் கு.மாரிமுத்து கருத்துத் தெரிவிக்கையில்,

காட்டுக்கு தீவைப்பதென்பது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதவேண்டியுள்ளது என்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சகோதர சமூகத்தவர்களினால், தமிழர்களுக்குச் சொந்தமான மற்றும் பொதுக் காணிகள் வேகமாகவும் நன்கு திட்டமிடப்பட்ட முறையிலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

சனத்தொகைப் பெருக்கத்திற்கேற்ப காணிப் பங்கீடு இடம்பெறுமாயின் எந்த ஒரு பிரச்சினையும் எழாது. ஆனால், காணியைக் காரணம் காட்டி இரு சமூகங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்துவதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் முற்படுகின்றது.

சொந்தத் தேவைக்காக ஒரு பச்சை மரத்தடியை வெட்டினால் அடுத்த நிமிடம் இலங்கை வனவள அதிகாரிகள் பொதுமக்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துகின்றனர்.

அதுமாத்திரமல்ல, சமையலுக்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலையைப் பறித்து விற்பனை செய்யும் ஒரு பொதுமகனைக் கூடி இந்த அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், ஏக்கர் கணக்கில் காடுகளைத் தீயிட்டுக் கொழுத்தியுள்ளவர்களை ஏன் இதுவரையில் இலங்கை வனவள அதிகாரிகளும் இலங்கைப் பொலிஸாரும் கைது செய்யவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் நாவலடிச் சந்தியில் பாரிய குடியேற்றம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, நாவலடியிலிருந்து புணானை வரைக்கும் உள்ள வீதியின் இரு மருங்கிலும் தற்போது காடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமைக்கு உள்நோக்கம் இருப்பதாக மாரிமுத்து சந்தேகம் வெளியிட்டார்.

நன்றி

கூர்மை