பன்குடாவெளி கிராமத்தின் அபிவிருத்திக்கெனநான்கு மில்லியன்

மயூ.ஆமலை ]
ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பன்குடாவெளி கிராமத்தின் அபிவிருத்திக்கென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா. ஸ்ரீநேசன் அவர்களின் முயற்சியின் பேறாக நான்கு மில்லியன் ரூபாய்களை பொருளாதார, கொள்கை திட்டமிடல் அமைச்சு ஒதுக்கியுள்ளது

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களின் சார்பாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னதுரை சர்வானந்தன் மற்றும் கிராம  அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பன்குடாவெளி துறையடி வீதி மற்றும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழக மைதானத்தின் அபிவிருத்திக்கென இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

பன்குடாவெளி கிராம மக்களும் மீனவர்களும் பெரிதும் சிரமத்தின் மத்தியில் பயணம் செய்து வந்த இந்த துறையடி வீதியை விரிவாக்கம் செய்து கொங்ரிட் இடுவதற்காக இரண்டு மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை செப்பனிடுவதன் மூலமாக நரிப்புல்தோட்டம், மகிழவெட்டுவான், கற்குடா ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும், மீனவர்களும் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

அத்துடன் இக்கிராமத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் எவரெஸ்ட் விளையாட்டுக் கழக மைதானமும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. சுற்று மதில்களுடன், கூடிய நவீன மைதானமாக இம் மைதானம் அமைப்பெரவுள்ளமை குறிபிடத்தகது.  இதற்காக  இரண்டு மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்படவுள்ளது.

அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ள குறிப்பிட்ட வீதி மற்றும் மைதானத்தினை இன்று (18.08.2018) பாராளுமன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் து.

மதன் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தன், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.