திருமலையில் அதிரடிப்படையினர் பயணித்த பஸ்மீது கல்வீச்சு.

திருகோணமலை விஷேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு மறைந்திருந்து கல் வீச்சு நடாத்திய சம்பவமொன்று  நேற்று (17) காலை பம்மதவாச்சி பகுதியில் இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதியினூடாக பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது வீதியோரத்தில் மறைந்திருந்து கல்வீச்சு நடாத்தியதாக தெரியவருகின்றது.

குறித்த பஸ்ஸின் முன் கண்ணாடி உடைந்த நிலையில் கல் வீசிய நபரை விஷேட அதிரடிப்படையினர் துரத்தி மடக்கிப்பிடித்துள்ளதாகவும் அவர் உள நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கல்வீச்சு நடாத்திய நபர் வௌி மாவட்டத்திலிருந்து வருகை தந்தவர் எனவும் அவர் மொறவெவ கன்னியா மற்றும் பம்மதவாச்சி பகுதிகளில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடமாடி வருபவர் எனவும் அப்பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் கல்வீச்சு நடாத்தியவரை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.