நாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர இந்தப்போராட்டம் ஓயாது .வே.அருணாசலம்

தமிழ்மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது:
ஜனாதிபதியுடன் பேசி தீர்வுகாண்பதாக கோடீஸ்வரன் எம்.பி. உறுதி:
நான்காவது நாளாக தொடர்கிறது பொத்துவில் மண்மீட்புப்போராட்டம்!
(காரைதீவு  நிருபர் சகா)

 
தமிழ்மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. உங்களது போராட்டம் நியாயமானது. எனினும் இந்தப்பிரச்சினை மாவட்டமட்டத்தில் தீர்க்கப்படமுடியாதது. எனவே ஜனாதிபதி வரை சென்று இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவேன்.
 
என்று பொத்துவில் கனகர் கிராமத்தில் மண்மீட்புப் போராட்டத்திலீடுபட்டுவரும் மக்களைச் சந்தித்த த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் உறுதியளித்தார்.
 
பொத்துவில் ஊறணி கனகர் கிராம தமிழ்மக்களின் மண்மீட்புப்போராட்டம் நேற்று(17) வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நடைபெற்றது.
 
 
அவர் நேற்றுமாலை அங்கு சென்று மக்களைச்சந்தித்தார்.
அவர் மேலும் அங்கு கூறுகையில்:
இந்தப்பிரதேசத்தை நான் நன்கு அறிவேன. இங்கு பூர்வீகமாக நீங்கள் இருந்துவந்ததையும் அறிவேன். ஆனால் இன்று இங்கு குடியேற அனுமதியில்லையென்பது அப்பட்டமான உரிமை மீறல்.
 
இது இந்த தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். வனவள இலாகா இவ்விதம் வீதியை அண்மித்தவாறு எல்லைக்கற்களையிட்டு எல்லைப்படுத்தியமை நியாயமானதல்ல. 
 
எனவே எமது மக்களின் இந்த நியாயாமான பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி வரை செல்லவும் தயாராகவுள்ளேன. என்றார்.
 
 
அண்மையில் ஜ.நா.சென்ற கல்முனை மாணவர் மீட்புப்பேரவைத்தலைவர் எந்திரி க.கணேஸூம் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.
 
 
பரம்பரை பரமபரையாக வாழ்ந்துவந்த எமது சொந்தக் காணியில் சென்று குடியேறவேணடாம் என்று சொல்ல வனவள அதிகாரிகளுக்கு அந்த அதிகாரத்தை யாhர் வழங்கியது? என்றும் மக்கள் கேள்வியெழுப்பினர்.
இதுதானா நல்லாட்சியின் லட்சணம் ?  நிலத்தைமீட்கும்வரை எமது போராட்டம் ஓயாது என்றனர் அவர்கள்.
 
பொத்துவில் ஊறணி கனகர் கிராம தமிழ்மக்களின் மண்மீட்புப்போராட்டம் நேற்று(17) வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நடைபெற்றது.
 
போராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ்மக்கள் இரவுபகலாக அந்த இடத்திலேயே அமர்ந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராடப்போவதாகக்கூறியுள்ளனர்.
 
1981இல் அரச வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இங்கு 30வீடுகள் அமைக்கப்பட்டு முன்னாள் எம்.பி. எம்.சி.கனகரெத்தினத்தின் பெயரில் கனகர்கிராமம் திறந்துவைக்கப்பட்டது.
1990 வன்முறையின்பேதது உடுத்தஉடுப்போடு இடம்பெயரநேரிட்டது. அவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்து திருக்கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.
பின்பு நிலைமை சீராகியதும் 2009இல் தமது சொந்த நிலத்தில் மீளக்குடியேற வந்தபோது பேரதிர்ச்சி அவர்களுக்க காத்திருந்தது. அவர்களது நிலத்தில்  வனபரிபாலன இலாகாவும் இராணுவத்தினரும் குடிகொண்டிருந்தனர். 
அதுமாத்திரமல்லாமல் மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியமர அனுமதிக்கவுமில்லை. இன்றுவரை அவர்கள் தடையாக இருந்துவந்துள்ளனர்.
கடந்த 9வருடகாலமாக பொறுமையோடு காத்திருந்த மக்கள் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தாம் வாக்களித்த அரசியல்வாதிகளின் உரிமையுடனான சேவையை எதிர்பார்த்துள்ளனர்.
 
நாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர இந்தப்போராட்டம் ஓயாது என்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கச்செயலாளர் வே.அருணாசலம் சூழுரைத்தார்.