மல்வத்தைக்கு தனியானபிரதேசசபை வேண்டும்!கோடீஸ்வரன் எம்.பி

மல்வத்தை சந்தையைதிறந்துவைத்து கோடீஸ்வரன் எம்.பி. உரை!
(காரைதீவு  நிருபர் சகா)
 
தமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிதானமாகப் பயணிக்கின்றது. அந்த அரசியல்தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய தேவைகளை இலகுவாகப்பூர்த்தி செய்யமுடியும். எனவே மக்கள் பூரண ஆதரவைத்தரவேண்டும்.

 
இவ்வாறு 34வருடங்களின் பின்னர் மல்வத்தையில் வாராந்தச் சந்தையை  மீண்டும் திறந்துவைத்துரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுஇணைத்தலைவருமான ஏ.கே.கோடீஸ்வரன் வேண்டுகோள்விடுத்தார்.
 
மல்வத்தைப் பிரதேச மக்களின் நலன்கருதி சம்மாந்துறை பிரதேசசபையின் உப தவிசாளர் வெ.ஜெயச்சந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இச்சந்தை நேற்று(15) புதன்கிழமை  மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜ.எம்.மன்சூர் ஏ.கே.கோடீஸ்வரன் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
 
அங்கு கோடீஸ்வரன் எம்.பி.மேலும் உரையாற்றியதாவது:
 
கடந்த யுத்தத்தில் வட கிழக்கில் வாழுகின்ற தமிழ்மக்கள் சொல்லொணாத்துயரத்தை அனுபவித்தனர். விலைமதிக்கமுடியாத பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்தனர். உடைமைகளை இழந்தனர். உரிமைகளை இழந்தனர். 
 
இவற்றையெல்லாம் மனதில்நிறுத்தியே ஒரு தீர்வுத்திட்டத்தைநோக்கி த.தே.கூட்டமைப்பு பயணிக்கின்றது. அதேவேளை எமது மக்களுக்கான அபிவிருத்தியையும் முன்கொண்டுசெல்லவேண்டிய கட்டாயமுமுள்ளது.
 
மாகாணசபைக்கு அதிகாரங்கள் தேவை!
 
இருக்கின்ற மாகாணசபைக்கு பூரண அதிகாரங்களை வழங்கினால் நாம் எம்மை ஆளும் அதிகாரமிக்க நிலை உருவாகும். ஆனால் இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரிடம் அல்லது மத்தியஅரசிடம் கையேந்தவேண்டிய துர்ப்பாக்கியநிலை நிலவுகின்றது.
 
மாகாணசபைக்குரிய சட்டம் பொலிஸ் நீதி போன்ற அதிகாரங்களை வழங்கினால் பிரச்சினையில் பெரும்பகுதி குறைந்துவிடும்.
 
இந்த மல்வத்தைப்பிரதேசம் கடந்தகால யுத்தத்திற்கு கூடுதல் விலைகொடுத்துள்ளதை நாமறிவோம். பல தடவைகள் பலசக்திகளாலும் தாக்குண்டு புலம்பெயர்ந்து இன்று ஓரளவு நிம்மதியுடன் மீளக்குடியேறி வாழ்கிறீர்கள். உபதவிசாளர் ஜெயச்சந்திரன் மேற்கொண்ட முயற்சியால் இனநல்லிணக்க அமைச்சு சந்தைக்கான  நிதியை ஒதுக்கியிருந்தமைக்கு நன்றிகள்.
 
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் நாங்கள். ஆனால் இந்த நல்லாட்சி அரசில் எமக்கான தேவைகளைப் பெறுவதில் பாரிய சிக்கல் எதிர்நோக்கப்படுகின்றது. நல்லாட்சியை உருவாக்கியவர்களை அரசு தொடர்ந்து புறந்தள்ளிவருவது அல்லது அவர்களது தேவைகளை தட்டிக்கழித்துவருவது ஆரோக்கியமானதல்ல.
 
வைத்தியசாலை அபிவிருத்தி காணவேண்டும்.!
 
இங்குள்ள மல்வத்தை வைத்தியசாலையொன்றே இப்பிரதேச அபிவிருத்தியின் இழிநிலையை சுட்டிக்காட்ட நல்ல உதாரணமாகும். 100வருடங்களுக்கும் மேலான பழைமையான இவ்வைத்தியசாலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையிலே உள்ளது. இது மாகாணசபைக்குள்வருவதனால் கிழக்கு ஆளுநரிடம் பேசினோம்.
 
ஆளுநரிடம் பலதேவைகளையிட்டு பலதடவைகள் முன்வைத்துப் பேசியுள்ளோம். ஆனால் எந்த ஆக்கபூர்வமான தீர்வும் எட்டப்படுவதில்லையென்பது வேதனைக்குரிய விடயமாகும். மாகாணசபைக்கான வைத்தியசாலை என்பதால்  ஆளுநரின் தலையீடு கட்டாயம் வேண்டும்.
 
தனியான மல்வத்தை பிரதேசசபை வேண்டும்!
 
இந்த மல்வத்தைப் பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை உருவாக்கப்படவேண்டும் என்று நாம் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளோம். சம்மாந்துறை பிரதேசசபையானது பாரிய பரப்பை உள்ளடக்கியது. அதனால் நிருவாகம் செய்வது சிரமம். எனவே தனியான சபை அமையும்போது இப்பிரதேசம் பல வித அபிவிருத்திகளைக்காணமுடியும்.
 
இந்தப்பகுதி மக்களுக்கு வீடமைப்புத்திட்டம் அவசியம். அமைச்சர்சஜித்பிரேமதாசவுடன் பேசியுள்ளோம். அரசகாணி இனங்கண்டு தர சம்மாந்துறை பிரதேசசெயலாளர் முன்வரவேண்டும். அரசகாணியிருப்பின் வீடமைப்பை மேற்கொள்வதில் சிரமமில்லை.
 
எனவே சகலரும் இணைந்து பலஊர்களையுள்ளடக்கிய மல்வத்தையை அபிவிருத்தி செய்யவேண்டியது காலத்தின் கட்டாயதேவையாகும் என்றார்