திருமலையில் காணிஆவணங்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

பொன்ஆனந்தம்

திருகோணமலை மொறவேவ பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள சொந்த இடம் திரும்பிய பல குடும்பங்களின் காணி ஆவணங்கள் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழக்கிழமை பன்குளம் அவ்வைநகர் கிராமத்தில் காணிப்பிணக்குகள் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்விலேயே மக்கள் இக்கோரிக்கையை விடுத்தனர்.

அமையம் அமைப்பின் தலைவரும் காணி மத்தியஸ்தசபை உறுப்பினருமான சு.பரமேஸ்வரன் தலமையில் திருகோணமலை மாவட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான அமையத்தின் ஏற்பாட்டில்,இடம்பெற்ற நிகழ்வில்

முன்னாள் காணி உதவி ஆணையாளர் மற்றும் மாவட்டக்காணி மத்தியஸ்தர் சபை ஆலோசகருமான ந.கணவதிப்பிள்ளை அகம் அமைப்பின் மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு காணி ஆவணத்திற்கு விண்ணப்பித்து பலமுறை காணிக்கச்சேரி நடைபெற்றபோதும் இன்னும் ஆவணங்கள் பெற்றுக்கொள்ளாத பலரும் தமது கவலையை வெளிப்படுத்தினர்.

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தாம் மீளத்திரும்பி பல வருடங்கள் ஆனபோதும் தமக்கான உரித்தாவணங்களான காணி ஆவணங்கள் இன்னும் வழங்கப்படாமையினால் தமது வாழ்வாதார அபிவிருத்தியை செய்யமுடியாது திண்டாடுவதாகவும் முறையிடுகின்றனர்.

பலமுறை பிரதேச செயலகங்களுக்கும் அதிகாரிகளிடமும் அலைந்தபோதும் முறையான ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனை வழங்க துரிதப்படுத்து மாறு வந்திருந்த காணி மத்தியஸ்த சபை பிரதிநிதிகளிடம் மக்கள் தெரிவித்தனர்.

பலருக்கு காணி கச்சேரி நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் பலருக்கு அது நடைபெறவும் இல்லை. எனவும் மக்கள் தெரிவிக்கையில் குறிப்பிட்டனர்