மகிழடித்தீவுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டு சென்ற வாகனம் மடக்கிப்பிடிப்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான வீதியின் மகிழடித்தீவு பகுதியில் வைத்து, சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் தாண்டியடி விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் இன்று(16) வியாழக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

முற்றாக மறைக்கப்பட்ட சிறியரக கென்ரர் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட ஐந்து மாடுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கென்ரர் வாகனத்தில் எருமை மாடுகள் இரண்டும் பசு நாம்பன் மாடுகள் மூன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலைப்பகுதியிலிருந்து மண்முனை நோக்கி குறித்த வாகனம் வேகமாக சென்ற நிலையிலே, மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், அடைக்கப்பட்டபட்ட வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டுசெல்லப்படுகின்றன, இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கூறப்பட்ட நிலையிலே அடைக்கப்பட்ட வாகனத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.