உசுப்பேற்றும் வேலைகளை விடுத்து, ஆய்வறிக்கையின் மூலம் பதிலை பெற்றுக்கொள்வதே பொருத்தமுடையது – ஞா.சிறிநேசன்

உசுப்பேற்றும் வேலைகளை விடுத்து, ஆய்வறிக்கையின் மூலம் பதிலை பெற்றுக்கொள்வதே பொருத்தமுடையது. கண்ணைமூடி முற்றாக எதிர்க்கும் சமூகமும், ஆதரிக்கும் சமூகங்களும் இருந்தன. அவ்வாறான சமூகங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு விடயத்தினை இருபக்கம் கொண்டு பார்க்க வேண்டும். சாதக, பாதகங்களை அறிய வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று(14) செவ்வாய்க்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது, மகிழடித்தீவு, முதலைக்குடா பகுதியில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணையை மீண்டும் ஆரம்பித்தல்; தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே இக்கருத்தினைக் குறிப்பிட்டார்.

நீர்வாழ் பண்ணை அமைப்பு, பிரச்சார விடயமாக பார்க்கும் விடயமல்ல. அறிவில், விஞ்ஞான, தொழிநுட்ப ரீதியாக பார்க்கின்ற விடயம். ஒரு விடயத்தினை கையாளும் போது, எவ்வற்றில் சாதகம் உள்ளது, பாதகம் உள்ளது. சாதகத்தினை கூட்டிக்கொண்டு, பாதகத்தினை குறைக்க என்ன வழியுள்ளது. அரசியல் ரீதியாக பார்க்கின்ற போது, விருப்பு, வெறுப்புக்கள் இருக்கும். ஒருவர் சொல்வதனை எதிர்க்க வேண்டும். இன்னொருவர் சொல்வதனை ஆதரிக்க வேண்டும். ஒருகட்சிக்காரர் கூறினால் எதிர்க்க வேண்டும். மற்றொரு கட்சிக்காரர் கூறினால் ஆதரிக்க வேண்டும். இவற்றினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவிடயத்தினை செய்வதாகவிருந்தால், எமது அரசியல் அறிவிக்கு அப்பால், விஞ்ஞான, தொழிநுட்ப ரீதியாக அறிவுள்ளவர்கள் இருக்கின்றனர். இவ்வாறானவர்களை குழப்பாமல் நடுநிலையாக ஆய்வு செய்வதற்கு சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும். அவ்வாய்வில் பாதகம் கூடுதலாக உள்ளது. சாதகம் குறைவாகவிருந்தால் அவ்வாறான திட்டங்களை நிறுத்த வேண்டும். சாதகம் கூடுதலாகவிருந்து, பாதகம் குறைவாகவிருந்தால் பாதங்களை கட்டுப்படுத்தக்கூடிய தொழிநுட்ப முறைகளும் எம்மிடம் உள்ளன. அவ்விடத்தில் அதைப்பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்.

வாகரையில் இறால் பண்ணை உருவாக்கப்படவிருந்தபோது, பல காரணங்களைக் கூறி அதனை நிராகரித்துவிட்டோம். ஆனால் மன்னாரில் தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதனை செய்வதற்கு முன்வந்துள்ளார். சில விடயங்களை ஆழமாக பார்க்க வேண்டும். அதற்காக கண்ணைமூடிக்கொண்டு எதிர்க்கவும் கூறவில்லை, ஆதரிக்கவும் கூறவில்லை. கட்சி அரசியலுக்கு வெளியில் வந்து அறிவியல், விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து, ஆய்வாளர்களை இனங்கண்டு, ஆய்வாளர்களிடம் பொறுப்பினை அளித்து, செய்ய முடியும் என்றால் செய்ய வேண்டும். செய்ய முடியாதென்றால் வேண்டாமென நிராகரிக்க வேண்டும். பொதுமக்கள் இவ்விடயத்தில் அறிவுள்ளவர்கள் என்று கூற முடியாது. ஆனால் பொதுமக்களிடம் தீப்பொறியொன்றினை எறிந்துவிட்டால் இலகுவாக பற்றவைக்க முடியும். எனவே விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட வேண்டும், அறிக்கை பெறப்பட வேண்டும், அறிக்கை தொடர்பில் ஆராயவேண்டும். அரசியல் பகுதியும் பொதுவான கருத்துக்கள் எழுகின்ற போது, ஏற்றுக்கொள்ள வேண்டும். உசுப்பேற்றும் வேலைகளை விடுத்து, ஆய்வறிக்கையின் மூலம் பதிலை பெற்றுக்கொள்வதே பொருத்தமுடையது. என்றார்.