சட்டவிரோத செயல்களை தடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத மண் அகழ்தல், மாடு கடத்தல், கசிப்பு உற்பத்தி போன்ற செயல்கள் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பணிப்புரை பிறப்பிக்கப்பட்டது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்;டபத்தில் நேற்று(14) நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில், சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிராமசேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னெடுக்கின்ற போதும், அதற்கான ஒத்துழைப்பினை கொக்கட்டிச்சோலை பொலிஸார் வழங்குவது மிகக்குறைவாகவே காணப்படுவதாக பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர்கள் இதன் போது தெரிவித்தனர். தமக்கான ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் பொலிஸார் வழங்குகின்ற போது, சட்டவிரோத செயல்களை பாரியளவில் கட்டுப்படுத்த முடியும் எனவும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டனர். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறுகின்ற போது, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தொடர்பில் மக்கள் நம்பிக்கையற்றுள்ளதாகவும், சிவில் அமைப்புக்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்படப்போவதில்லையென்ற கருத்தினை முன்வைத்துள்ளதாகவும், பாடசாலை கற்கின்ற பிள்ளைகளும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு தம்மிடம் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.