ஆசிரியர் மத்திய நிலையம் மார்கழி 31க்கு இடையில் விடுவிக்கப்படும் – கொக்கட்டிச்சோலை பொலிஸார் உறுதி.

கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் பாவனையில் உள்ள ஆசிரியர் மத்திய நிலையமானது, எதிர்வரும் மார்கழி 31ம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி சிசிர பண்டார உறுதியளித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம், அபிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், சோ.கணேசமூர்த்தி ஆகியேரின் தலைமையில் இன்று(14) செவ்வாய்க்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

2007ம் ஆண்டிற்கு முன்னர், குறித்த ஆசிரியர் மத்திய நிலையம் அமைக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கான வாண்மைவிருத்தி செயற்பாடுகள் இதனூடாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், 2006ம் ஆண்டு பிற்பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் இடம்பெயர்ந்தனர். யுத்தம் நிறைவுபெற்று மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்ட போது, ஆசிரியர் மத்திய நிலையத்தில் பொலிஸார் தமது கவலரணை அமைந்திருந்தனர். குறித்த பகுதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக அபிவிருத்திக்குழுக்கூட்டங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, விடுவிப்பதாக கூறப்பட்ட நிலையிலும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதற்கமைய மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கான ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளர் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும், ஆசிரியர் மத்திய நிலையம் இன்மையினால் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளரினால் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய புதிய இடமொன்றில் பொலிஸ் நிலையத்தினை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், அதற்கமைய எதிர்வரும் மார்கழி 31க்கு முன்னர் ஆசிரியர் மத்திய நிலையத்தினை விடுவிப்பதாகவும் இதன்போது, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.