மாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் நடைபெற்றால் சிறுபான்மை மக்களுக்கு பெரும் அநீதியாகும் – பிரதியமைச்சர் அமீர் அலி

மாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக நடைபெற்றால் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பெரும் அநீதியாக அமையும் என கடற்றொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கடற்றொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின நிதி ஒதுக்கீட்டில் சலவை தொழில் செய்வோருக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (13) மாலை வந்தாறுமூலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – “இந்த நாட்டில் அரசியல் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதற்காக பல அரசியில் கட்சிகள் முனைப்போடு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எதிர்வருமா மாகாணசபைத் தேர்தல் எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பது பற்றி அரசியல்வாதிகள் மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது என்பது பற்றி நாங்கள் சுட்டிக்காட்டியவேளை இந்த அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பின்பு சபைகளில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட கஸ்டங்களும் முரண்பாடுகளும் அவர்களுக்குப் படிப்பினையாக இமைந்திருக்கும்.

ஒரு பிழையான உள்ளுராட்சி சபைத் தேர்தலை நாங்கள் நடத்தி முடித்துள்ளோம். இந்த நாட்டுக்கு உதவாத வட்டார முறையிலான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முறை எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என்பதிலே எனக்கு நம்பிக்கை உள்ளது.

புதிய முறையில் மாகாணசபைத் தேர்தல் நடாத்தபட வேண்டும் என ஆளும் தரப்பினரிடையே வாதப் பிரதிவாதங்கள் ஆரமப்பிக்கப்பட்டுள்ளன. புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதான கட்சிகள் போர்க்கொடி தூக்கிக் கொண்டுள்ளார்கள். இது வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பெரும் அநீதியாக உள்ளது.

ஓவ்வொரு பகுதிகளிலும் சிறிது சிறிதாக வாழ்கின்ற மக்கள் உள்ளுராட்சி சபைகளுக்கோ, மாகாணசபைத் தேர்தலிலோ அல்லது பாராளுமன்ற தேர்தலிலோ ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய முடியாதவகையில் இந்த புதிய தேர்தல் முறை காணப்படுகிறது என்பதனை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் காலங்களில்; எக்காரணம் கொண்டும் புதிய தேர்தல் முறைப்படி தேர்தல்கள் நடார்த்ததுவதற்கு சிறுபாண்மைக் கட்சிகள் இடமளிக்க கூடாது. வடக்கிற்கும் கிழக்கிற்கும் அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிறுபான்மைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் தங்களுக்கென ஒரு பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் வைக்கின்ற இந்த திட்டமிட்ட தேர்தல் முறை சிறுபான்மையினரின் குரல் வளைகளை நசுக்குகின்றவகையில் செய்கின்ற எத்தனிப்பே தவிர சிறுபான்மை மக்களுக்கு அரசியல் உரிமை கொடுக்கும் வேலைத் திட்டமாக எனக்குத் தெரியவில்லை.

சிறுபான்மை சமூகம் மீது அரசியல் ரீதியாக அநியாயத்தை செய்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் தெழிவாக இருக்கின்றோம். இது போன்ற சட்டமூலம் இன்னுமொருமுறை பாராளுமன்றத்திலே வருமாகவிருந்தால் எதிர்காலத்திலே சிறுபான்மைக் கட்சிகளினால் தேற்கடிக்கப்படும்” என்றார்