பொதுமக்கள் நூறுவீதம் அனுமதியை வழங்கினால் மட்டுமே முதலைக்குடா, மகிழடித்தீவு இறால் பண்ணையை நடாத்த முடியும் – ச.வியாழேந்திரன்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலப்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு, முதலைக்குடாப் பகுதியில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணையை அப்பகுதியில் உள்ள மக்களின் நூறுவீத அனுமதியைப் பெற்றே நடாத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று(14) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே, இதனைக் குறிப்பிட்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு, முதலைக்குடாப் பகுதியில் உள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணையை நடாத்துவது தொடர்பிலான கருத்திட்ட சுருக்கத்தினை நக்டா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் முன்வைத்த போதே இதனைக் கூறினார்.

செரெண்டிப் நிறுவனத்தினால் 1987ம் ஆண்டு காலப்பகுதியில், குறித்த பகுதியில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டு நீர்வாழ் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பண்ணையில் வேலை செய்தவர்கள் 1987ம் ஆண்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து இப்பண்ணை கைவிடப்பட்டு, யுத்த நிறைவின் பின்னர் ஓரிரு பண்ணைகள் செய்யப்பட்டு வந்த நிலையிலும் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும், குறித்த பகுதியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய 2016ம் ஆண்டு அரசாங்க அதிபருடனான ஆரம்ப கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து, 2017.11.31ல், 30வருட நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான அமைச்சரை அங்கீகாரமும் பெறப்பட்டு, 2018.02.14ல் அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பான ஆவணங்கள் நக்டா பணிப்பாளர் நாயகத்தினால் மட்டு அரச அதிபருக்கு கையளிக்கப்பட்டிருப்பதாகவும், 2018.02.20ல் அமைச்சின் செயலாளர் அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பாக பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உயர்பிரதிநிதி நக்டா, முதலீட்டுச்சபை ஆகியவற்றினூடான கலந்துரையாடலும், 2018.02.26ல் அமைச்சரவை அங்கீகாரம், கருத்திட்ட சுருக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது நக்டா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிட்டார். மேலும், 11.04.2018ல் சமூக மட்டத்தில் சூழவுள்ள கிராமமக்களின் ஆலோசனையை பெற்றுள்ளதாகவும், 25.04.2018ல் சூழவுள்ள கிராமமக்கள், பிரதேச செயலக ஊழியர்களுக்கான வெளிக்கள விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாகவும், 25.06.2018ல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் சிபார்சு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதோடு, திட்டத்தை கிராமிய மக்கள் ஒருசாரார் நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்றொருசாரார் முற்றாக மறுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துக்கூறுகின்ற போதே, இப்பகுதியில் உள்ள மக்கள் நூறு வீதமான அனுமதியை வழங்கினால் மட்டுமே, குறித்த பகுதியில் பண்ணையை நடாத்த வேண்டுமென்ற கருத்தினை முன்வைத்தார்.

மக்களின் நூறுவீத அனுமதியைப் பெற்று தொழிற்சாலைகள் உருவாக்கப்படாமையினாலையே, புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற போத்தலில் குடிநீர் அமைப்பதற்கான தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.