யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்லிணக்க நினைவூட்டல் ஓவிய ஆக்கப்படைப்புகளின் கண்காட்சி நிகழ்வு

உண்மை மற்றும் நல்லிணக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்லிணக்க நினைவூட்டல் ஓவிய ஆக்கப் படைப்புகளின் கண்காட்சி நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் பிரதம அதிதியாக தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா கலந்து கொள்வதுடன், மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களையும் சேர்ந்த 18 பெண்களின் கதைகளை ஓவியங்களாக இக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களையும் சேர்ந்த பெண்கள் பங்குபற்றுகின்றனர்.
இவ்வாறான கண்காட்சிகள் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஒன்றியம் இக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
தான் அல்லது தாம் மாத்திரமே பாதிக்கப்பட்டதாக இருக்கும் ஒவ்வொருவருடைய சிந்தனைகளிலும் ஏற்படும் மாற்றமானது அனைத்து இன மக்களிடையேயுமான நல்லிணக்கம் ஏற்பட வழியை ஏற்படுத்தும் என்ற நோக்கில் மக்களிடையே வழிப்புணர்வை உருவாக்குவதற்கான முயற்சியாக மாவட்டங்கள் தழுவிய வகையில் இக் கண்காட்சிகள் நான்காவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட இணைப்பாளரான வடிவேல் ரமேஸ்ஆனந்தன் தெரிவித்தார்.
சமூக அபிவிருத்திக்கான நிலையத்தினால் நாடு பூராகவும் உருவாக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஒன்றியமானது நல்லிணக்கத்திற்கு ஆர்வமுள்ள உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராம மட்ட அமைப்புகள், ஆர்வமுள்ள நலன் விரும்பிகளை இணைத்து உருவாக்கப்பட்டு;ள்ளதுடன் சுதந்திரமாகவும் செயற்பட்டு வருகிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின்  நல்லிணக்க நினைவூட்டல் ஓவிய ஆக்கப்படைப்புகளின் கண்காட்சி தேசிய ரீதியில் கடந்த டிசம்பர் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதனையடுத்து அம்பாறை கிறிஸ்தா இல்லத்தில் கடந்த யூலை மாதம் 20 மற்றும் 21ஆம்திகதிகளில் நடைபெற்றது. திருமலையில் எதிர்வரும் செப்ரம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.