கேபிள் ரிவி நிறுவனங்கள் ஒருவாரத்துள் எமது அனுமதியைப்பெறவேண்டும்! ஞாயிறு தனியார் வகுப்புக்குத்தடை: காரைதீவு பிரதேசசபையில் தீர்மானம்!

காரைதீவுப் பிரதேசத்துள் சேவையை வழங்கும் கேபிள் ரிவி நிறுவனங்கள் ஒரு வாரகாலத்துள் பிரதேசசபையின் அனுமதியைப் பெறவேண்டும்.
இவ்வாறானதொரு தீர்மானத்தை நேற்று(10) கூடிய காரைதீவு பிரதேசசபை ஏகமனதாக நிறைவேற்றியது.
காரைதீவு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று(10)வெள்ளிக்கிழமை தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
ஒருவாரகாலத்துள் இவ்விதம் அனுமதி பெறாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மக்களின் மாதாந்த கொடுப்பனவைப் பெறமுடியாதநிலை தோன்றும்.
மக்களிடம் பணம்பெறும் இந்நிறுவனம் பிரதேசசபைக்குத் தெரியாமல் இவ்வேலையச்செய்யமுடியாது. சபைக்கு 5வீதம் செலுத்தவேண்டும். எனவும் கூறப்பட்டது.
அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்ட சபையில் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் முன்வைத்த பிரேரணைக்கமைவாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இனிமேல் காரைதீவு பிரதேசத்துள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பாக காலையில் அறநெறிவகுப்புகள் நடைபெறுவதால் பிரத்தியேக வகுப்புகள் தனியார் வகுப்புகள் நடாத்துவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் சபாபதி நேசராசா முன்வைத்த இப்பிரேரணையும் ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
காரைதீவுக்குள் நுண்கடன் பெற்று திருப்பிச்செலுத்தமுடியாதவர்களை பதியுமாறு கேட்டிருந்தோம்.இதுவரை 260பேர் பதிந்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிசாருடன் கலந்துரையாடி இவர்களது கடனை ரத்துச்செய்வதா? அல்லது வட்டியை இரத்துச்செய்வதா? அல்லது வட்டியின் வீதத்தை குறைப்பதா? என்பது தொடாபில் முடிவெடுப்போம்.எனவே வட்டியைச் செலுத்தமுடியாதவர்கள் தொடர்புகொண்டு தீர்வுகாணலாம் எனக்கூறப்பட்டது.
உறுப்பினர் சின்னையா ஜெயராணிகூறுகையில்: வீட்டில் “அம்மா இல்லை” என்று 5 வயதுக்குழந்தையை பொய் சொல்லப்பழக்கியுள்ளது இந்த நுண்கடன். நிறுவனத்தினருக்கு பயந்து ஓடி ஒழிக்கும் இழிநிலை தோன்றியுள்ளது. மரணத்தின் விளிம்பில் அவர்கள் தத்தளிக்கிறார்கள். தூக்குப்போட்டுச்சாகிறார்கள். எனவே நுண்கடனை தடைசெய்யவேண்டும் என்றார்.
மாளிகைக்காடு பொதுமக்களின் விருப்புக்கமைவாக மாளிகைக்காட்டில் ஏர்ரெல்  கோபுரம் அமைக்க சபை அனுமதிவழங்கவில்லை என உறுப்பினர்மு.காண்டீபன் கேட்டகேள்விக்குப் பதிலளிக்கையில் தவிசாளர் குறிப்பிட்டார்.
வருடாந்த ஆதனவரியை மக்களிடம்  பெறுவது தொடர்பில் பேசப்பட்டபோது உறுப்பினர்கள் எதிர்ப்புத்தெரிவித்து கருத்துக்களைக்கூறினர்.