விடுதிக்கல் நெடியமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வு

கொக்கடடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல்கிராமத்தின் நெடியமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழப்படுவதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.

குறித்த, ஆற்றுப்பகுதியில் நீர் வற்றியுள்ள நிலையில், அவ்வாற்றில் உள்ள மண்ணை இனந்தெரியாதோர் அகழ்ந்து செல்வதாகவும் குறிப்பிடுகின்றனர். மண்ணினை தோண்டி எடுத்தமைக்கான குழிகளும், மண்குவியலும் அங்கு காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். விடுதிக்கல், களுமுந்தன் வீதிக்கு அருகில் உள்ள ஆற்றிலே சட்டவிரோதமான முறையில் மண் அகழப்படுவதினால், குறித்த வீதி முற்றாக உடைந்து, போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.