தமிழ்த் தேசியக்கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படலாம் – மு.நா.உ அரியநேந்திரன்

(கேதீஸ்)

இணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக்கொள்கை இதற்கு மாற்று கருத்து இல்லை இந்த கொள்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக பயணிக்கின்றது. மாகாண சபை தேர்தல் அறிவிப்புக்கள் வெளியாகியதை தொடர்ந்து தமிழ் கட்சிகளின் இணைவு தொடர்பாக பல கருத்துக்கள் பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் தமிழர்களின் வாக்குகள் பிரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதே நேரம் எந்த கொள்கைக்காக இத்தனை தியாகங்களை எம்மவர்கள் செய்தார்களோ அந்த கொள்கைக்கு மாறாகவோ இக்கொள்கைக்கு மாறானவர்களுடனோ கைகோர்க்க முடியாது ஆனால் இணைந்த வடகிக்கு தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடனும் இணைந்து செயற்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருவது தொடர்பாக கேட்டபோதே  இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்…

தமிழ்த் தேரியக் கொள்கையுடன் இணைந்த வடக்கு கிழக்கு கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் இணநை;து செயற்படவேண்டும் என்பது எனது கருத்து. தமிழ் மக்களின் அரசியல் பலத்தின் தேவை அவசியம் கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூரநோக்கு சிந்தனையுடன் அன்று உருவாக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் சொந்தமானது எனவே அனைவரும் தமிழர் நலன் கருதியும் எம் மக்களின் இழப்புக்கள் தியாகங்களை மதித்து ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.
தமிழ்த் தேசியத்தை சிதைப்பவர்களுக்கும் இணைந்த வடக்கு கிழக்கை பிரிப்பவர்களுக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்காது வடக்கு கிழக்கில் உள்ள இணைந்த வடக்கு கிழக்கு கொள்கையில் உறுதியாகவுள்ள தமிழ் கட்சிகள் இணைந்து செயற்பட வருமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் வரவேற்கும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் கடந்தகால புள்ளிவிபரங்களை நோக்குகையில் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்கமுடிகிறது தமிழர்களின்  தொகை அதிகரிக்க வேண்டுமானால் தமிழர்களின் பிறப்பு வீதம் அதிகரிக்கப்படவேண்டும்.அபிவிருத்தி, நிலபாதுகாப்பு, கலாசார விழுமியங்களை பேணல் என்பவற்றுக்கும் அந்த இனப்பரம்பல் மக்கள் தொகை அதிகரிப்பு என்பவை கட்டாயம் தேவை.

தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் வீதம் அதிகரிக்கப்படவேண்டும் வாக்களிப்பு வீதம் ஏனைய இனங்களைவிடவும் குறைவதாலும், எமது வாக்குகள் சிதறடிக்கப்படுவதாலும் பெரும்பான்மை கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளாளும் எமது இன விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய ஆசனங்கள் மாற்றுத்தரப்புக்கு செல்கிறது.

வாக்குகள் சிதறப்படாமல் இருக்கவும் தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும் என்றார்.