கிழக்கில் ஆலய உற்சவ காலங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டாம்

கிழக்கில் தற்போது பிரசித்திபெற்ற இந்து ஆலயங்களில் உற்சவங்கள்; நடைபெற்றுவருகின்றன. இதன்போது சமய நிகழ்வுகளுக்குப் புறம்பாக இசைநிகழ்ச்சிகளை நடத்துவதை ஆலயநிர்வாக சபையினர் தடைசெய்யவேண்டும் என கிழக்கிலுள்ள இந்துசமய நிறுவனங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன.
இது தொடர்பில் ஆலயநிர்வாக சபையினர்களுக்கு சமய நிறுவனங்கள் விடுத்துள்ளவேண்டுகோளில் தெரிவித்துள்ளதாவது..
கிழக்கில் தற்போது இங்கு அமைந்துள்ள கிராமங்கள் தோறும்  பிள்ளையார், முருகன், அம்மன் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்கள் நடைபெற்றவருகின்றன. இவ் ஆலய உற்சவங்களின் போது சில இடங்களில் சினிமாப்பாடல்கள், குத்துப்பாடல்கள் கொண்ட இசைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இதனால் ஆலயங்கள் கேளிக்கை இடமாக மாறிவருகின்றது. இசை நிகழ்ச்சிகளைக் பார்வையிடவருகின்ற இளைஞர்களில் பலர் மதுபோதையிலும், ஆலயவளாகங்களில் அநாகரீகமான முறைகளில் நடனங்களையும் ஆடிவருகின்றனர். அத்துடன் சில இளைஞர் குழுக்களுக்கு இடையில் கைகலப்புக்களும், வாய்த்தர்க்கங்களும் இடம்பெறுகின்றன. கடந்தகாலங்களில் இசைநிகழ்ச்சிகளின்போது பாரியசண்டைகள் ஏற்பட்டதும் அவை பொலிஸ்நிலையம் வரை சென்றும் உள்ளன.  அதனால் இந்து சமயத்தின் பாரம்பரியம் மழுங்கடிக்கப்படுகின்றது.
ஆலயநிர்வாகங்கள் ஆலய உற்சவகாலங்களில் சமய நிகழ்வுகளுக்கும், பாரம்பரியங்களுக்கும்  முன்னுரிமையளிக்கவேண்டும். எதிர்கால சமூகத்திற்க்கு சிறந்த ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்து ஆலயங்கள் செயற்படவேண்டும் என இந்து சமய நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.