மாக்கூப்ப வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலய புனரமைப்பு குறித்து துரைரெட்ணசிங்கம் பா.உ. கடிதம்

பொலநறுவை வெலிக்கந்தை மாக்கூப்ப வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்தினையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம் புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றம் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாக்கூப்ப வெள்ளிமலைப்பிள்ளையார் ஆலயம் தற்போது கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஊத்துச் சேனை கிராமத்தில் தற்காலிகமாக பிரதிஸ்டை செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.

பாரம்பரியமாகபபராமரிக்கப்பட்ட மாக்குப்ப வெள்ளிமலைப்பிள்ளையார் ஆலயத்தினை மீளவும் சொந்த இடத்தில் மீளவும் இயங்குவதற்குரிய புனரமைப்பு நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்தும் மீள இயங்கச் செய்வது குறித்தும் ஸ்ரீ ரமண மகரிசி இலங்கைக்கிளைத் தலைவர் செல்லத்துரை பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கத்திடம் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அந்த வேண்டுகோளுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இந்த வேண்டுகோளை விடுத்தள்ளார்.

அத்துடன், பொலநறுவை மாவட்டத்தின் மாக்குப்ப, சுரியோடை கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பில் ஸ்ரீ ரமண மகரிசி இலங்கைக்கிளையும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், திருவண்ணாமலை ரமணாச்சிரமத்திலிருந்தும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து, தொழில், பொருளாதாரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இக் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வியும் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்களை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இடம்பெயர்ந்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தின் மாக்கூப்ப, சுரியோடை கிராமங்களிலிருந்து 1990ஆம் ஆண்டுகளில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசித்துவரும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பொலநறுவை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இந்த வருட ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று , கோரளைப்பற்று தெற்கு, ஏறாவூர் பற்று உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் 700 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

27 வருடங்களாக வேறு இடங்களில் வசித்துவரும் இந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்குரியசெயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அவரால் அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் பொலநறுவை மாவட்ட அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துமிருந்தார்.