மனோகணேசன் வடகிழக்கில் எமது அரசியல் நிலமையை குழப்புவது பற்றி சிந்தித்து செயல்படவேண்டும்

அமைச்சர் மனோ கணேசன் வடகிழக்கிற்கு வந்து எமது அரசியல் நிலமையைக் குழப்புவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புத்தி கூற நினைப்பது பற்றி சிந்தித்துப் செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வடகிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்  எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுக்கு ஏற்பட்ட பல சவால்களை சுமந்திரன்  நேரடியாக பேசி தணித்து வைத்தார். இதையெல்லாம் அமைச்சர் மனோ கணேசன் மறந்துவிட்டார். நாங்கள் இவற்றை வெளியில் கூறவிரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளை புனரமைப்பது தொடர்பான கூட்டம் திங்கட்கிழமை (06) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே இவ்வாறு சுட்டிக்காட்டினார்..

ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளைதத் தலைவர் சி.சர்வானந்தன் தமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் கா.இராமச்சந்திரன், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – நாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாகுவது உறுதி அதிலே நாங்கள் எதிர்பார்த்த உச்சம் எவ்வளவு வரும் என கூற முடியாது. அவ்வாறு வருகின்றபோது அதனையே சிலர் பிரசாரம் செய்வார்கள்.

கூடுதலான அதிகாரப் பகிர்வுகளுடன் அரசியலமைப்புச் சட்டம் வருகின்றபோது அதை ஏற்றுக்கொள்வதற்கும் மக்களிடம் எடுத்துச் செல்லவும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தை பாராளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நிறைவேற்றித்தர வேண்டியது ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய கடமை இந்த நாடு பொருளாதார சுபீட்சம் பெறவேண்டுமானால் புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டும் என்றார்.