சட்டவிரோத மாடு கொண்டுசெல்தலை தடுப்பதற்கு அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மாடு கடத்தலை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச தினக்கூட்டம் இன்று(06) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்ற போதே, இதனைக் குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

மண்முனை தென்மேற்குபிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வழங்கப்படுகின்ற அதேவேளை, சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படும் மாடுகள் சிலவற்றை பிரதேச செயலக, கிராமசேவை உத்தியோகத்தர்கள் ஊடாக பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. இருந்தபோதிலும், தொடர்ச்சியாக மாடுகள் கடத்தப்படுகின்றமை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றினைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் அனைவரும் கூட்டாக இணைந்து செயற்படவேண்டும். மேலும் மண்முனை பாலத்திலிருந்து மகிழடித்தீவு வரையான வீதி இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகின்றது. இவ்விடங்களில் பிரதேச சபை மின்குமிழ்களை ஒளிரவிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென்பதுடன், மாலை, இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடும் மாடுகாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எடுக்க வேண்டுமென்றும் என்றார்.