அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளனர்.

கட்சி தலைவர்களின் உடன்பாட்டுடனேயே அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுபனவை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என செய்தி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்துபோதும் அவ்வாறான எந்தவொரு முன்மொழிவும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும், அத்தகைய தீர்மானத்திற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடக் காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி , ஜனாதிபதி என்ற வகையில் தனது சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை தான் உறுதியாக நிராகரித்துவிட்டதாக குறிப்பிட்டார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு பொருத்தமானதல்ல, என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சிச் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை வைத்தியசாலை சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக கட்டிட தொகுதியை நேற்று (04) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பொலன்னறுவை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு வழிப்பாதைகளைக் கொண்ட புதிய வீதி நிர்மாணப் பணிகளுக்காக அகற்றப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு பதிலாக 64 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்வில் பொலன்னறுவை மாநகர சபையின் நகர பிதா சானக்க ரணசிங்க, தமன்கடுவ பிரதேச சபையின் தலைவர் பிரேமசிறி முனசிங்க, வர்த்தக சங்கத்தின் தலைவர் அருன பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.