கல்முனையில் பரபரப்பு .ஒன்றுகூடிய தமிழர்கள்

அடிக்கல்நடுவிழா மக்களின் தலையீட்டால் நிறுத்தம்!
கல்முனையில் பரபரப்பு: இன ஜக்கியத்தை குழப்பமுயற்சி!
(காரைதீவு நிருபர் சகா)
கல்முனையில் நேற்று நடைபெறவிருந்த ஒரு நிறுவனத்திற்கான அடிக்கல்நடுவிழா பொதுமக்களின் தலையீட்டால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று(4)சனிக்கிழமை பகல் கல்முனை தமிழ்ப்பிரிவிலுள்ள கல்முனை 1 சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூடவே ஒருவித பதட்டமும் நிலவியது.

அரச ஸ்ரீலங்கா தேசிய ஒப்பந்தகாரர் நிறுவனத்தின் கல்முனைக்காரியாலயத்திற்கான அடிக்கல்நடுவிழா தமிழ்மக்கள் வாழுகின்ற கல்முனை 1 சி பிரிவிலுள்ள அரசகாணியொன்றில் நடைபெறவிருந்தது. இதற்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எச்எம்.எம்.ஹரீஸ் வருகைதரவிருந்தார். விழாவிற்கான சகல ஏற்பாடுகளும் இரவோடிரவாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.

நேற்றுக்காலையில் செய்தியைக் கேள்வியுற்ற அப்பிரதேச தமிழ்மக்கள் “இது எமது பகுதி நாம் சுனாமியால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி அலைந்துதிரிகின்றோம். எமது பிரதேசத்திலுள்ள இந்தக்காணியில் நிறுவனமா? இதனால் எமக்கு எவ்வித பிரயோசனமுமில்லை.எமக்கு இங்கு வீடமைப்புத்திட்டமொன்றை ஏற்படுத்தி எம்மை நிரந்தரமாகக் குடியமர்த்துங்கள். இதனை மிறினால் விபரீதமேற்படும் “என்று கூறி விழாவிற்கென கட்டப்பட்டிருந்த மேடை அலங்காரங்களை ஆவேசத்துடன் தகர்த்தெறிந்தார்கள்.
சம்பவத்தை கேள்வியுற்ற அருகிலுள்ள கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் பாஸ்ரர் கிருபைராஜா மற்றும் மநாகரசபை உறுப்பினர்கள் பலரும் அங்கு வந்துசேர்ந்தனர்.

வண.சங்கரத்னதேரர் சம்பந்தப்பட்ட பிரதேசசெயலக உத்தியோகத்தருடன் தொலைபேசி மூலம் பேசினார். அதேவேளை பிரதேசசெயலாளரின் பிரதிநிதியாக வந்த கிராம உத்தியோகத்தருடன் பேசினார்கள்.
இறுதியில் அடிக்கல்நடுவிழாவை ரத்துச்செய்வதென்றும் இந்தக்காணி விடயம் தொடர்பாக இன்னும் இருவாரகாலத்துள் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் பேசி தீர்வுகாண்பதென்றும் முடிவாகியது.

அதன்பின்பு மக்கள் கலைந்துசென்றனர். கல்முனைப்பொலிசாரும் வந்துசேர்ந்தனர்.

வண.சங்கரேத்ன தேரர் மற்றும் பாஸ்ரர் கிருபைராஜா கூறுகையில்: இப்பிரதேச தமிழ்மக்களின் நீண்டநாள் கோரிக்கை நியாயமானது. அவர்களுக்கென வீடுவாசல் இல்லாமல் அலைகின்றபோது அவர்கள் பகுதியில் இக்காரியாலயம் அவசியம்தானா? எனவே அவர்களுக்கென வீடமைப்புத்திட்டமொன்றை ஏற்படுத்திக்கொடுப்பதுதான் நியாயம். இச்சம்பவத்தைப்பயன்படுத்தி இருசமுகங்களும் முரண்பட்டுக்கொள்ளும் நிலையை உருவாக்க சில தீயசக்திகள் முன்வரலாம்.அதற்கு யாரும் துணைபோகக்கூடாது என்றார்.