நுண்கடன் பெற்று அதனை கட்டமுடியாமல் திணறும் பயனாளிகள் அனைவருக்கும்.

காரைதீவுப் பிரதேசத்தில் நுண்கடன் பெற்று அதனை கட்டமுடியாமல் திணறும் பயனாளிகள் அனைவரும் உடனடியாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளரிடம் சகல விபரங்களையும் பதிவுசெய்யுமாறு சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இப்னுஅசார் அவசர வேண்டுகோளை நேற்று விடுத்துள்ளார்.
 
இந்த அறிவித்தலை காரைதீவிலுள்ள ஆலயங்களின் ஒலிபெருக்கி வாயிலாகவும் மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.
 
பொதுமக்கள் எந்த நிறுவனத்திடம் எந்தக்காலப்பகுதியில் எவ்வளவுதொகை பெற்றார்கள் என்ற விபரங்களைப் பதியவேண்டும். தவிசாளரிடமோ அல்லது அந்தந்த வட்டாரப்பிரதிநிதிகளிடமோ பதியலாம்.
 
இந்தப்பதிவின்பின்னர் பிரஸ்தாப நிறுவனங்களை பொலிசார் தவிசாளர் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்து தீர்வுகாணவிருப்பதாகக்கூறப்பட்டுள்ளது.
 
(3)வெள்ளிக்கிழமை பகல்  காரைதீவு 12 இல் நுண்கடனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து அங்கு விரைந்த தவிசாளர் கே.ஜெயசிறிலிடம் நுண்கடன்பெற்று திருப்பிச்செலுத்தமுடியாமல் விரக்தியின் விளிம்பிலிருக்கும் மக்கள் கூறிய சோகக்கதைகள் பல.
ஒருவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்தவேளையில் இச்சோகக்கதைகள் வெளியாகின. 
 
உடனடியாக தவிசாளர் ஜெயசிறில் குறித்த நுண்கடன் நிறுவனப்பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினார். பின்னர் பொலிசுக்கு அறிவித்தார். அந்தவேளையிலேயே மேற்படி அறிவித்தலை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி விடுத்துள்ளார்.