நடுத்தெருவில் விடப்பட்ட 90வயது மூதாட்டியின் பிள்ளைகளை மன்றில் ஆஜராகுமாறு நீதிவான் பணிப்பு!

 

மூதாட்டி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
தமிழ் இளைஞர் சேனைக்கு மக்கள் பாராட்டு!
காரைதீவு  நிருபர் சகா
 
கல்முனையில் நடுத்தெருவில் கைவிடப்பட்டநிலையில் கல்முனை தமிழ் இளைஞர்சேனை இளைஞர்களால் மீட்கப்பட்ட மூதாட்டியின் பிள்ளைகள் மூவரையும்  நீதிமன்றில் ஆஜராக்குமாறு அழைப்பாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 
கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கை நேற்று(2)வியாழக்கிழமை  விசாரித்த நீதிவான் ஜ.என்.றிஸ்வான் குறித்த மூதாட்டியின் பிள்ளைகளை  மன்றில் ஆஜராக்குமாறு  பணித்துள்ளார்.
 
குறித்த மூதாட்டி  மல்வத்தையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சீனிப்பிள்ளை(வயது 90) என இனங்காணப்பட்டுள்ளார்.
 
கல்முனை வைத்தியசாலை முன்பாக சிலதினங்களுக்குமுன்(26ஆம் திகதி வியாழக்கிழமை) பிள்ளைகளால் கொண்டுவந்து கல்முனை ஆதாரவைத்தியசாலை முன்பாக இறக்கிவிடப்பட்டுள்ளார். 
 
இவ்வாறு கைவிடப்பட்டு அநாதரவாகக்கிடந்த மூதாட்டியை கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை அமைப்பினர் கண்டு உடனடியாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சேர்த்தனர். 
 
இளைஞர்சேனையால்  மீட்கப்பட்ட குறித்த மூதாட்டியை பின்னர்  முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர்சேனை அமைப்பு வழக்கொன்றை தாக்கல் செய்தது. வழக்காளி சார்பாக  சட்டத்தரணி நடராஜா  சிவரஞ்சித் மற்றும் சட்டத்தரணி முத்துலிங்கம்  ஆர்த்திகா ஆகியோரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி றிஸ்வான்  எதிர்வரும் 9ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதே வேளை குறித்த மூதாட்டியை  கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சை பெறுமாறும் பணித்ததுடன் அந்த மூதாட்டியின்  பிள்ளைகள் மூவரையும்  அடுத்த தவணைக்கு ஆஜராகும் வண்ணம் அழைப்பாணையையும் பிறப்பித்தார்.
 
மூதாட்டியின் பிள்ளைகளான பாண்டி கிருஸ்ணன் பாண்டி குபேந்திரன் பாண்டி தவமணி ஆகியோர் மல்வத்தையிலுள்ளனர். அவர்களை எதிர்வரும் 9ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இவர்களுக்கெதிராக தாபரிப்புவழக்கு போடப்பட்டுள்ளது.
 
கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவுப்படி மீண்டும் மூதாட்டி  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கும் போது குறித்த மூதாட்டியின்  நிலை கண்டு மனிதாபிமான முறையில் சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல.எம். றிபாஸ் அவர்களும் ஆஜராகி மூதாட்டிக்காக  ஆதரவாக வாதாடியிருந்தனர்.
 
கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை அமைப்பின் பொதுச்செயலாளர் சட்பீடமாணவன் அ.நிதாஞ்சன் கூறுகையில்: 
 
குறித்த மூதாட்டியை நடுத்தெருவில்கண்டு ஆஸ்பத்ரிhயயில்சேர்த்தோம். முதியோர் இல்லத்pல் சேர்க்க நீதிமன்றத்தை நாடியபோது பிள்ளைகள் பற்றிய விபரம் தெரியவந்தது. நாங்கள் மல்வத்தைக்குச் சென்று பிள்ளைகளை கண்டு கதைத்தபோது அவர்கள் அவரை ஏற்கமறுத்துவிட்டனர். அவரை முடிந்தால் வயோதிபர் இல்லத்தில் சேருங்கள் என்று கூறி கடிதமும் தந்தனர்.
 
நாம் அம்பாறை மாவட்டத்தில் பெண்களை வைத்திருக்கும் இல்லம் இல்லாதகாரணத்தினால் மட்டக்களப்பு தாண்டவன்வெளி இல்லத்திற்குச்சென்று பேசினோம். பிள்ளைகளிருக்கும்போது அவர்களது சம்மதத்துடன்தான் சேர்க்கலாம் என்றுகூறி மறுத்துவிட்டார்கள். அதன்பிறகுதான் நாம் கல்முனை மஜிஸ்திரேட்டில் பிள்ளைகளை ஆஜராகும்வண்ணம் தாபரிப்பு வழக்குத்தாக்கல் செய்தோம். அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி அவர்கள் ஆஜராகவேண்டும்.என்றார்.
 
அம்பாறை மாவட்டத்தில் முதியோர் இல்லம் இரண்டு உள்ளன. சிங்கள மக்களுக்கென அம்பாறையில் ஒன்று உள்ளது.
 
தமிழ்பேசும் ஆண்களுக்கென திருக்கோவிலில் ஒரு வயோதிபர் இல்லம் உள்ளது. ஆக பெண்களுக்கென முதியோர்இல்லம் இல்லை. இதுஇவ்வாறிருக்க 1997ஆம் ஆண்டு 37ஆம் இலக்க பராமரிப்புச்சட்டப்பிரகாரம் பெற்றோரையே யாரையோ பிள்ளைகள் இவ்விதம் நடுத்தெருவில் விடமுடியாது. அவ்வாறுவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கமுடியுமென இளைஞர்சேனை அமைப்பின் சட்டபீட மாணவன் அ.நிதாஞ்சன் தெரிவித்தார்.
 
கல்முனைப்பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் இளைஞர்களை மக்கள் பாராட்டியுள்ளனர்.