மட்டு – தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற பட்டிமன்றம்

செ.துஜியந்தன்

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பட்டிமன்றக்குழுவினரின் நுண்கடன் சமூகத்திற்கு அவசியமா? அவசியம் இல்லையா? எனும் தலைப்பில் சிறப்புபட்டிமன்றம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டு தமிழிச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன் கலந்து கொண்டார். வரவேற்புரையினை தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் அருட்பணி நவரெட்ணம் அடிகளாளர், நன்றியுரையினை தமிழ்ச்சங்க செயலாளர் வே. தவராஜா ஆகியோர் ஆற்றினார்கள்.
பட்டிமன்றத் தலைவராக கவிஞர் வேதமூர்த்தி தலைமைதாங்கினார். பேச்சாளர்களாக சௌந் லெனாட் லொறன்ஸோ, நிலாந்தி சசிக்குமார், நிலோஜினி குணசேகரன், செ.துஜியந்தன், செ.திவாகரன், பா.மிதுர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு தலைமைதாங்கிய மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தெரிவிக்கையில்…
சமூகத்தில் புரையோடிப்போய்க்கிடக்கும் சமூக அவலங்களை இலக்கியங்களுடாகவும், கலைகளுடாகவும் வெளிக்கொணரவேண்டும். இதற்க்கு கலைஞர்களின் பங்களிப்பு மிக அவசியமானதாகும். ஏந்தவொரு விடயத்தினையும் மக்களுக்குப் புரியக்கூடிய வகையில் கலை நிகழ்ச்சிகள் ஊடாக கொண்டுசெல்லும் போது அது இலகுவில் மக்களைச் சென்றடையும். அந்தவகையில் இன்று மக்களை வாட்டிவதைக்கும் நுண்கடன் திட்டம் தொடர்பில் எமது தமிழ்ச்சங்கம் பட்டிமன்ற நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இது காலத்தின் தேவையாகும்.
தமிழ்ச்சங்கம் இலக்கிய நிகழ்வுகளை மட்டும் நடத்தாது. இவ்வாறான சமூகவிழிப்புணர்வுள்ள நிகழ்வுகளையும் நடத்துவதையிட்டு நாம் பெருமை அடைகினறோம். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை இலக்கியத்தின் ஊடாகவும், கலைகளின் ஊடாகவும், கலைஞர்கள் ஊடாகவும்தான் மனிதயியல் உட்பட அனைத்து காரியங்களும் நடத்தப்பட்டிருக்கின்றது. இலக்கியங்களும், கலைகளும் காலத்தின் கண்ணாடிகளாகும். அவற்றை அந்தந்தக்காலத்தில் பதிவு செய்யவேண்டும். தற்போது மக்கள் மத்தியில் நுண்கடன் எனும் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இதனை கலைஞர்கள் பல்வேறு விதங்களில் மக்களிடம் விழிப்புணர்வூட்டி வருகின்றனர். இந்த கிழக்குமாகாண பட்டிமன்றக்குழுவினரும் தங்களது பட்டிமன்றங்களுடாக மக்களை விழிப்படையச் செய்து வருகின்றனர். இவர்களது இச் செயற்பாட்டிற்க்கு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் ஒரு அடையாளத்தைப்பெற்றுக்கொடுத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் கிராமப்புறங்களில் பட்டிமன்றங்களை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.