இலங்கையில் இன்று நான்காவது முருகபத்தி மாநாடு ஆரம்பம்!

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
 
நான்காவது முருகபக்தி மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு இந்து மத அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியத்தின் ஏற்பாட்டின் கீழ் கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயக் கலையரங்கில் இன்று  இரண்டாம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என இந்து சமய சலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன்  தெரிவித்தார்.
 
தொடர்ந்து நாளை மூன்றாம் திகதியும் நாளைமறுதினம்  நான்காம் திகதியும் மற்றும ஐந்தாம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்தார்.
 
 
தென்கிழக்காசியாவின் மலேசியத் திருநாட்டிற் பெட்டாலிங் ஜெயாவிலிருந்து எம்பெருமான் முருகவேளின் மகோன்னத புகழை உலகுக்கு அறியச் செய்யும் வகையில் முருகபக்தி மாநாடுகளை உலகெங்கும் நடாத்திவரும் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் மலேசிய திருமுருகன் திருவாக்குத் திருப்பீடம் 2012 ஆம் ஆண்டில் முதலாவது முருகபக்தி மாநாட்டினை மலேசியாவிலும் இரண்டாவது முருகபக்தி மாநாட்டினை 2014 இற் சுவிற்சர்லாந்திலும் 2016 ஆம் ஆண்டு மூன்றாவது முருகபத்தி மாநாட்டினைத் தென்னாபிரிக்காவிலும் சிறப்புற நடாத்தியதோடல்லாமல் 2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஏழாம் நாள் நடைபெற்ற மூன்றாவது முருகபக்தி மாநாட்டின் வைபவத்தில் மலேசியா திருமுருகன் திருவாக்குத் திருப்பீடத்தின் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அவர்களின் திருக்கரங்களால் நான்காவது முருகபக்தி மாநாட்டினை ஈழத்திரு நாட்டின் இந்து மத அலுவல்கள் அமைச்சுப் பொறுப்பேற்று நடாத்தும் வகையில் ஞானச் செங்கோல் கையளிக்கப்பட்டது. 
 
இச் சீர்மிகு நிகழ்வு ‘நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாடு – 2018’ ஆக இந்து மத அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியத்தின் ஏற்பாட்டின் கீழ் கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயக் கலையரங்கில் 2018 ஆகஸ்ட் மாதம் இரண்டாம் மூன்றாம் நான்காம் மற்றும ஐந்தாம் திகதிகளில் நிகழ்ந்தேற முருகப் பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.
 
 
 
‘உலகெங்கும் கோயில் கொண்டு விளங்கும் பெருமானின் அருட்புகழை வேதாகம புராண இதிகாச இலக்கிய பன்னிரு திருமுறை சித்தர்நெறி என முருக ஆராதனையின் பன்முக ஆய்வின் வண்ணம் பக்திநெறியை நிலைநிறுத்தல்’ என்கின்ற பிரதான நோக்கினையும் முருக வழிபாட்டின் உண்மை நெறியை உலகறியச் செய்தல் முருகப் பெருமான் வழிபாட்டினையும தத்துவங்களையும் உலகளாவிய நிலைக்கு எடுத்துச் செல்லுதல் உலகின் பல பாகங்களில் வாழும் முருக பக்தர்களை ஒருங்கிணைத்தல் முருகப்பெருமான் குறித்த பல்துறை ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளைப் படைப்பதற்கும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் களமமைத்துக் கொடுத்தல் மாநாட்டிற் படைக்கப்படும் விவாதிக்கப்படும் செய்திகளை நூல்வடிவிற் பதிவு செய்தல் இளந்தலைமுறையினரிடையே முருக வழிபாடு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல் முதலான இதர நோக்கங்களை முன்னிறுத்தியே இம் முருகபக்தி மாநாடுகள் உலகளாவிய ரீதியில முன்னெடுக்கப்படுகின்றது.
 
நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டிற் பங்கெடுக்கும் அருளாளர்கள் வரிசையில் புரவலரும் மாநாட்டுக் குழுவின் அருட்தலைவரும் மலேசிய திருமுருகன் திருவாக்குத் திருப்பீட முதல்வருமாகிய தவத்திரு பாலயோகி சுவாமிகள் அவர்களும் இந்தியத் திருநாட்டிலிருந்து திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சீர்வளர் சீர்ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் அவர்களும் சிரவணபுரம் கௌமார மடாலய மடாதிபதி முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களும் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீன சீர்வளர சீர்சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் அவர்களும் ஈழமணித் திருநாட்டின் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களும் வருகைதந்து அருளுரை வழங்கவுள்ளதோடு சிவாச்சாரியார்களின் ஆசியுரைகளும் இம் மாநாட்டைப் பக்திமயமாக்கவுள்ளன.
 
 
 
மேலும் இம் மாநாட்டின் பிரதம அதிதிகளாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வே.இராதாகிருஷ்ணன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமாகிய கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி (னுச) பொ.சுரேஷ் அவர்களும் மேனாள் மலேசியத் துணை அமைச்சர் தான்ஸ்ரீ-டத்தோ க.குமரன் அவர்களும் மலேசியா சக்தி அறவாரியத் தேசியத் தலைவர் திருக்கயிலைச் செல்வர் டத்தோ ஸ்ரீ தனேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
 
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வேந்தரும் இந்துப் பண்பாட்டு நிதியத் தலைவருமான பேராசியர் சி.பத்மநாதன் அவர்கள் மற்றும் எம் நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புகழ்பூத்த பேராசிரியர்களும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்கள் இந்திய தேசத்துப் புலமையாளர்களாகப் பேராசிரியர் சோ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் முனைவர் சிவஸ்ரீ எஸ்.பி.சபாரத்தின சிவாச்சாரியார் அவர்கள் பேராசிரியர் சிவகுமார் அவர்கள் முதுமுனைவர் திரு சக்திவேல் முருகனார் அவர்கள் முதலானோரும் புத்திஜீவிகள் நிர்வாகிகள் சமூக சமய ஆர்வலர்கள் ஆலய அறங்காவலர்கள் அறநெறிப்பாடசாலைச் சமூகத்தினர் எனப் பலதிறத்தோரும் இம்மாநாட்டைச் சிறப்பிக்கவுள்ளனர்.
 
கருத்தரங்கம் சிறப்புப் பேச்சுக்கள் ஆகியனவும் இம் முருகபக்தி மாநாட்டை அலங்கரிக்கவுள்ள நிலையில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் தலைமையில் ‘அருணகிரி அமுதம்’ என்னும் தலைப்பில் இடம்பெறவுள்ள கருத்தரங்கத்தில் பேராசிரியர் சோ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் ‘திருப்புகழ்’ என்னும் தலைப்பிலும் கந்தரனுபூதி என்னும் தலைப்பில் இசைக்கவி ரமணன் அவர்களும் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் கந்தரலங்காரம் பற்றியும் சிலாகிக்கவுள்ளனர். 
மேலும் சிறப்புப் பேச்சுக்கள் வரிசையில் ‘குமரகுருபரர் அருளிய கந்தர் கலிவெண்பா’ – பேராசிரியர் சோ.மீனாட்சிசுந்தரம் ‘திருமந்திரமும் திருப்புகழும்’ – முனைவர் சிவஸ்ரீ எஸ்.பி.சபாரத்தின சிவாச்சாரியார் ‘நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை’ – பேராசிரியர் சிவகுமார் ‘அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்’ – முதுமுனைவர் திருசக்திவேல் முருகனார் ‘கந்தபுராணத்தின் நூற்பயன்’ – கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் ‘பரமகுருவின் பாத நிழலில்’ – இசைக்கவி ரமணன் ஆகியவை அரங்கங்காணவுள்ளன.
 
அரங்கை அலங்கரிக்கவிருக்கும் கலை நிகழ்வுகள் வரிசையில் திருமதி பவானி குகப்பிரியா அவர்களது நெறியாள்கையிற் தியாகராஜர் கலைக் கோயில் வழங்கும் ‘குறவஞ்சி’ நாட்டிய நாடகமும் ஸ்ரீமதி கிருத்திகாதேவி அவர்களின் நெறியாள்கையில் டிவைன் ஃபைன் ஆர்ட்ஸ் சபா குழுவினர் வழங்கும் நடனாஞ்சலியும் லேடர் கமர்சியல்ஸ் ரூ ஸ்ரீபனா நாட்டியப் பள்ளி வழங்கும் ‘கந்த வைபவம்’ ஆகிய நடன நிகழ்வுகளும் இம் மாநாட்டின் அரங்கங்காணவுள்ளன.
 
மேலும் சரஸ்வதி அறநெறிப் பாடசாலை கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி வட கொழும்பு இந்து பரிபாலன சபை அறநெறிப் பாடசாலை பத்மாவதி அறநெறிப்பாடசாலை ஜிந்துப்பிட்டிக் கதிரேசன் ஆலய அறநெறிப் பாடசாலை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் அறநெறிப் பாடசாலை மாணவர்களது நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் 
பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் சீடர் பேராசிரியர் அனந்தராமன் அவர்களின் பக்தி இன்னிசைக் கச்சேரி இசைப் பேரறிஞர் நா.வி.மு.நவரட்ணம் நுண் இசைமாமணி என்.பரந்தாமன் ஆகியோரது தெய்வீக இசையரங்கு மிருதங்க வித்துவான் வட்டுக்கோட்டை-பம்பலப்பிட்டி பிரம்மஸ்ரீ க.சுவாமிநாத சர்மாவின் இசை அரச்சனைக் குழுவினர் வழங்கும் சிறப்பு இசை நிகழ்ச்சி இசைச் செல்வர் ஐதராபாத் பா.சிவா அவர்களும் மாணவர்களும் வழங்கும் காவடிச் சிந்தும் கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்களும் இன்னிசை நிகழ்வு மட்டக்களப்புக் காயத்திரிபீடம் சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார் திருப்புகழிசை செல்வி எம்.எஸ்.பாலஷரவன் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன் அவர்கள் பிரம்மஸ்ரீ க.சுவாமிநாத சர்மாவின் இசை அர்ச்சனைக் குழுவினருடன் இணைந்து வழங்கும் தெய்வீக இசையமுது ஆகிய இசை வெள்ளமும் மாநாட்டரங்கிற் பிரவாகிக்கவுள்ளது.
 
 
 
மேலும் இம் முருகபக்தி மாநாட்டை முன்னிட்டுக் கந்தர் கலிவெண்பா – நா.ஏகாம்பரம் உரை கந்தபுராண அசுர காண்டம் – பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் உரை கந்தபுராணம் மகேந்திர காண்டம் – பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய் சாஸ்திரிகள் உரை வள்ளி திருமணப்படலம் – ஆறுமுகநாவலர் உரை சூரபத்மன் படலம் ஸ்ரீமத் வே.சிதம்பரப்பிள்ளை உரை மயூரகிரி புராணம் – மா.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை உரை திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சி உரை – சோ.அருளம்பலம் உரை கந்தரனுபூதி – அ.முத்துத்தம்பிப்பிள்ளை உரை கந்தரலங்காரம் – திருவிளங்கம் உரை கந்தரலங்காரம் – வைத்தியலிங்கம் உரை கந்தபுராண கலாசாரம் – பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் கட்டுரைகள் குருநாத சுவாமிபிள்ளை விடுதூது உரையுடன் சுப்பிரமணிய பாராக்கிரமம் மாவை புராணம் அருணகிரிநாதர் அருளிய ஈழத்து முருகன் திருப்புகழ்கள் சுப்பிரமணிய மகோற்ச பத்ததி சுப்பிரமணிய ஆலய நித்திய பூஜா விதி – அச்சுவேலி குமாரசுவாமிக் குருக்கள் சண்முக சகஸ்ரநாமம் கந்தசஷ்டி புராணம் திருச்செந்தூர் கலிவெண்பா பெரிய புராணமும் தமிழகப் பண்பாட்டு நெறிகளும் திருப்படைக் கோயில்கள் முருகபக்தி மாநாட்டுச் சிறப்பு மலர் ஆகிய நூல்களும் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியத்தினால் வெளியிடப்படவுள்ளன.
 
மேலும் ஓலைச் சுவடியில் இருந்து ‘கதிர்காம மாலை’ எனும் நூல் வெளியீடும் ‘திருமுருகன் ஆலயத் திருமேனிகள் கந்தபுராணம் கதிர்காமத் திருத்தலத் திருப்புகழ்ப் பாடல்கள் ‘அருணகிரிநாதர் அருளிய ‘ திருப்புகழ்’ ஆகிய நூல்கள் மற்றும் இசைவட்டுக்களாக வெளியீடு செய்யப்படவுள்ளன.
 
பேரறிஞர்களின் மாநாட்டுக் கட்டுரை வாசிப்புக்கள் பக்தி மணங்கமழும் பல நிகழ்வுகள் என வெகு சிறப்பாக எம்பெருமான் முருகனவன் அருட்திறத்தால் நான்காவது அனைத்துலக முருக பக்தி மாநாடாக நிகழவிருப்பது எம் தவப்பயனே. இச் சீர்மிகு நிகழ்விற் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.