மட்டக்களப்பில் கடினபந்து கிரிக்கெட்டை ஊக்குவிக்க நடவடிக்கை

(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை கடின பந்து, கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் பாடசாலைகளில் கடின பந்து, கிரிகெட் விளையாட்டினை ஊக்குவிக்க விளையாட்டு,உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பணிப்புரைக்கமைய விசேட திட்டங்களை தற்போது அமுல்படுத்தப்பட்டு விளையாட்டை ஊக்குவித்து வருகின்றார்கள்.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கடின பந்து,கிரிகெட் விளையாட்டினை ஊக்குவிக்க விளையாட்டுத்துறை அமைச்சு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தற்போது இம்மாவட்டத்தில் முன்னணிப்பாடசாலைகள் சிலவற்றை தெரிவு செய்து இந்த கடின பந்து கிரிக்கெற் விளையாட்டினை ஊக்குவிக்க தேவையான விளையாட்டு மைதானங்களை உருவாக்கவும்,தேவையான விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கவும், விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கமைய இம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லுரி, இந்துக்கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி, கிரான் மகா வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் தேசியப்பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு 10 லட்சம் ரூபா பெறுமதியான கடின பந்து கிரிக்கெற் உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை 31.07.2018 வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட செயலகத்திலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டு குறித்த விளையாட்டு உபகரணங்களை குறித்த பாடசாலை கிரிக்கெற் அணித்தலைவர்களிடம் வழங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை ஆதம்லெவ்வை, மாவட்ட கிரிக்கெற் விளையாட்டு பயிற்றுனர் கே.நிலக்ஸன், விளையாட்டு அபிவிருத்தி அலுவலர் என்.சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இந்த நடவடிக்கைக்கமைய எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் உள்ள சகல உயர்தரப் பாடசாலைகளிலும் கடினப்பந்து,கிரிகெட் விளையாட்டினை ஊக்குவிக்க விசேட திட்டம் அமுல் நடத்தப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

பாடசாலைகளில் கடினப்பந்து விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் தலா 5லட்சம் பெறுமதியான கடந்த வருடம் கிரிக்கட் வலைப்பயிற்சி ஆடுகளம் இப்பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதே போன்று இவ்வருட ஆரம்பத்தில் ஆடுகளத்தளவிரிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பாடசாலைகளுக்குமென மொத்தமாக கடினப்பந்து அபிவிருத்திக்கென 63 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.