கிழக்கில் முதன் முறையாக மேகக் கணணி (Cloud Computing) தொடர்பான நவீன பயிற்சி முகாம்

கிழக்கில் முதன் முறையாக உலகில் தற்போது வளர்ச்சியடைந்துவரும் அதிநவீன தொழில்நுட்பமான மேகக் கனணி மற்றும் அதன் செயற்பாடுகள் (Cloud Computing -365) பயிற்சி முகாம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மூன்று நாட்கள் (27-30) நடைபெற்ற இப் பயிற்சி முகாமில் 60 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேகக் கனணி மற்றும் அதன் செயற்பாடுகள் என்பது இணையத்தளத்தின் ஊடாக கணணி மற்றும் வெப் சேமிப்புத்தளங்களை கொள்வனவு செய்தல், பராமரித்தல் தொடர்பானதொரு இலத்திரனியல் செயற்பாடாகும்.
இன் நிகழ்வினை கனேடிய உலக பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பத்துக்கான கிழக்கு மாகாண சம்மேளனம், தகவல் தொழில்நுட்பத்திற்கான இலங்கை அமைப்பு (CSSL), மைக்ரோசொப்ற் சிறிலங்கா (Microsoft Sri Lanka)  மற்றும் வின்சிஸ் நெற்வேர்க் (WinSYS Networks)  கின் உதவியுடன் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் செயலமர்வுப் பயிற்சிகள் மைக்ரோ சொப்ற் (Microsoft) நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிவிப்பாளர்கள் (Microsoft MCT)  மற்றும் மைக்ரோ சொப்ற் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் சாதனையாளர்கள் (Microsoft MVP) ஐக் கொண்டு நடாத்தப்பட்டது.
அத்துடன் , இலங்கை மற்றும் சர்வதேச பயிற்றுவிப்பளர்கள் இணைத்தளத்தின் மூலமாகவும் பயிற்சிகளை வழங்கினர்.
இதில் இந்தியா, கிறீஸ், நெதர்லாண்ட், பெல்ஜியம், போத்துக்கல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இணையத்தின் மூலம் தங்களது தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு செயன்முறையுடன் பயிற்றுவித்தனர்.
இப் பயிற்சி முகாமின் ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வுகளில் அதிதிகளாக உலக கனேடிய பல்கலைக்கழகத்தின்   அணித்தலைவர் எஸ். யோகேஸ்வரன், நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ். கிரிதரன், மற்றும் கலாநிதி அன்வர் முஸ்தபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வின் இறுதியில்  பயிற்சி நெறியினை முடிவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மைக்ரோ சொப்ற்றின் இலங்கை கிளை மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இலங்கையின் அமைப்பு (CSSL))போன்றவற்றினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்திலுள்ள சிறிய நடுத்தர வணிக முயற்சியாளர்களுக்கான தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தல் தொடர்பிலான செயற்பாடுகளில்  கனேடிய உலக பல்கலைக்கழகம் தகவல் தொழில்நுட்பத்துக்கான கிழக்கு மாகாண சம்மேளனத்துடன் இணைந்து பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஒன்றாக மேகக் கனணி மற்றும் அதன் செயற்பாடுகள் (Cloud and Office 365) பயிற்சி முகாமும் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.