தமிழ் பரா விளையாட்டுப் போட்டியில் மட்டு. மாவட்டம் இம்முறையும் முதலாமிடம்

கிழக்கு மாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ் பரா விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் 408 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 28,29 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்ற தமிழ் பரா விளையாட்டுப் போட்டியில் 161 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை மாவட்டம் 2ஆம் இடத்தையும் 90 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இறுதிநாள் நிகழ்வு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்று(29) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமாரின் பிரதம பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் எம்.சி.எம். அன்சார், தலைமையக சிரேஸ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் சா.அருள்மொழி, மற்றும் எஸ். செல்வநாயகம் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தலைவர் க.பாஸ்கரன், டேட்டா நிறுவனத்தின் பணிப்பாளர் சம்பந்தன் சிவபாதவிருதயர், லண்டன் அபி டயமன் நிறுவனத்தின் துரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் க.ஜீவராசா, அரச சா ர்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிற்பகல் மாற்றுத் திறனாளிப் பாடகர்களினை உள்ளடக்கியதான இசை நிகழ்வும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.