தாந்தாமலை முருகன் தீர்த்தோற்சவம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்கதாக கூறப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் திருவிழா வெள்ளிக்கிழமை(27) இடம்பெற்றது. இதற்கான உபயத்தினை முனைக்காடு கிராமமக்கள் வழங்கினர். மேலும் தீர்த்தோற்சவம், இன்று சனிக்கிழமை(28) காலை 6.00மணிக்கு திருவோணநட்சத்திரத்தில் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

தீர்த்தோற்சவத்தினை தொடர்ந்து, பொன்னூஞ்சல் நிகழ்வும் நடைபெற்றது.

கடந்த ஜீலை 7ம் திகதி திருக்கொடியேற்றத்துடன், இவ்வாலயத்தின் மகோற்சவம் ஆரம்பமானது. தொடர்ச்சியாக இருபத்தொரு நாட்கள், மட்;டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் உபயத்துடன் திருவிழாக்கள் நாள்தோறும் நடைபெற்றன.

திருவிழா காலங்களில், ஸ்நபனபிசேகம், யாகபூசை, கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசை, சுவாமி வெளிவீதி வலம்வருகின்ற நிகழ்வுகளும் விசேடமாக நடைபெற்றன.

திருவிழா பூசை நிகழ்வுகளை உற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையிலான குழுவினர் நடாத்தயிருந்தனர்.

இறுதிநாள் திருவிழாவின் நிறைவின் போது, ஒருசில அடியார்கள் வள்ளியம்மன் ஆலய முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில், தீமிதிப்பில் ஈடுபட்டனர்.

நீண்டகால வரலாற்றினைக் கொண்ட தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வரலாறு, கூத்திகன் – சேனன், உலகநாச்சி, ஆடகசௌந்தரி, குளக்கோட்டன் போன்றோருடன் தொடர்புபட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. ஆடகசௌந்தரி தாந்தாமலை ஆலயத்தினை தரிசித்ததாகவும் மாளிகை அமைத்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதற்கு சான்றாக இன்றும் இராசதானி அமைந்திருந்த தடயங்களும் கற்றூண்களும் சிற்பவேலைப்பாடுகளும் சிதைந்து அழிந்த கற்களும் இன்றும் காணப்படுகின்றன.