சில இனவாதிகளின் விசமத்தனமான செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் நிதியை செலவிட வேண்டியுள்ளது

இனவாத அடிப்படையில் ஒரு சமூகத்தை அடக்குவதற்கு, அச்சமூகத்தின் பொருளாதார பலத்தை முடக்குவதற்கு முனைகின்ற போது அச்சமூகத்தை பொருளாதார ரீதியில் மீண்டும் கட்டியெழுப்பி பழைய நிலைக்கு கொண்டு செல்ல அரச வளங்கள், அரச நிதி என்பவற்றையே பயன்படுத்த வேண்டியுள்ளது.’ என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டில் அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு  வியாழக்கிழமை தர்கா நகர், ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
‘அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரமானது இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம். ஒரு அரசாங்கத்தையே தூக்கி எறிகின்ற அளவுக்கு முழு நாட்டு மக்களது மனநிலையையும் மாற்றிய ஒரு கசப்பான சம்பவம். கலவரம் நடைபெற்று நான்கு வருடங்கள பூர்த்தியடைந்த நிலையில் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினை வழங்குகின்றோம்.
நட்டஈட்டினை பெற்றுக்கொடுப்பதில் பல்வேறுபட்ட தாமதங்கள் – தடைகள் இருந்த சூழ்நிலையில் அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன், டாக்டர் ராஜித சேனாரட்ன, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன் உள்ளிட்டவர்கள் அதற்காக குரல் கொடுத்தனர்.
நான் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போது, மூன்று வருடங்களைக் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை என ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த விடயம் சம்பந்தமாக நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதுடன் தகவல்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் திரட்டி நட்டஈட்டுக்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் தயாரித்தோம்.
நட்டஈடு வழங்க நிதி அமைச்சு இணங்காத போதும் நாங்கள் தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகித்து இறுதியில் கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட நட்டஈட்டினை வழங்கியிருந்தோம். இன்று 182 மில்லியன் ரூபாய் கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கு வழங்குகின்றோம்.
வழங்கப்படுகின்ற நட்டஈடுகள் யாவும் அரசாங்கத்தின் பணமாகும். விசமத்தனமான செயற்பாடுகளில் ஏற்படும் இழப்பீடுகளுக்கு அரச நிதியையே வழங்க வேண்டியுள்ளது.
அண்மையில் திகன பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போதும் நான் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராகவே இருந்தேன். அப்போதும், அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிதியை நாங்கள் வழங்கியிருந்தோம். அதுவும் அரச நிதியிலிருந்தே வழங்கினோம்.
அம்பாறை பள்ளிவாசலை இரவோடு இரவாக எரித்தார்கள். இன்று அதற்கும் கோடிக்கணக்கான நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சில இனவாதிகளின் விசமத்தனமான செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் நிதியை செலவிட வேண்டியுள்ளது. இதனை அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இனவாத அடிப்படையில் ஒரு சமூகத்தை அடக்குவதற்கு, அவர்களது பொருளாதாரத்தை முடக்குவதற்கு முனைகின்ற போது எத்தனை வருடங்கள் சென்றாலும் அந்த சமூகத்தை பொருளாதார ரீதியில் மீண்டும் கட்டியெழுப்பி பழைய நிலைக்கு அச்சமூகத்தை கொண்டு செல்வதற்கு அரச வளங்கள், அரச நிதி என்பவற்றையே பயன்படுத்த வேண்டியுள்ளது.
ஆகவே, நாடு என்ற ரீதியில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைங்து புது யுகத்தைக் கட்டியெழுப்ப முனைகின்ற போது மீண்டும் இனவாத செயற்பாடுகளால் நாட்டை சீர்குழைக்க சிலர் முற்படுகிறார்கள். ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுத்ததில் எனது பங்களிப்பும் இருந்ததையிட்டு சந்தோசமடைகின்றேன். – என்றார்.