கதிர்காமம் செல்லும் திக்குத்தெரியாத காட்டில் மனத்தை நெகிழவைக்கும்  சம்பவம்ஒருதாயின் உருக்கமான வேண்டுகோள்!

ஒருதாயின் உருக்கமான வேண்டுகோள்!
கதிர்காமம் செல்லும் திக்குத்தெரியாத காட்டில் மனத்தை நெகிழவைக்கும் 
சம்பவம்.
  1. ( சகா)
 
உகந்தையிலிருந்து நானும் எனது இரு வாய்பேசாத மகன்களும் முதற்றடவையாக கதிர்காமம் செல்வதற்காக 17ஆம் திகதி காலை காட்டுக்குள் இறங்கினோம். மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சென்றுகொண்டிருக்கையில் எனது கடைசிமகனைக்காணவில்லை. இன்றுவரை காட்டுக்குள்ளும் கதிர்காமத்திலும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இன்னும் கிடைக்கவில்லை. யாராவது கண்டால் அறிவிக்கவும்.
இவ்வாறு கதிர்காம காட்டுப்பாதையில் தனது மகனைப்பறிகொடுத்த தாய் திருமதி கணபதிப்பிள்ளை யோகநாயகி(வயது 66) பதறுகின்றார்.
இவர் மட்டக்களப்பு படுவான்கரைப்பிரதேசத்தின்  கொக்கட்டிச்சோலைப்பிரதேசத்திலுள்ள முனைக்காடு எனும் கிராமத்தைச்சேர்ந்தவராவார். இச்சம்பவம் கடந்த 18 ஆம் திகதி நடுக்காட்டுக்குள் இடம்பெற்றிருக்கிறது. கடந்த 10நாட்களாகத்தேடியும் கிடைக்கவில்லை. 
கடந்த 16ஆம் திகதி வீட்டிலிருந்து தாய் திருமதி க.யோகநாயகியுடன் இருமகன்களான நல்லையா குணாநிதி(வயது 36) நல்லையா குகதாஸ்(வயது 28) கதிர்காமம் செல்வதற்காக உகந்தைக்குச்சென்றார்கள். மகன்மார் இருவரும் வாய்பேசாதவர்கள். 18ஆம் திகதி குமுக்கனிலிருந்து நாவலடி செல்லும் வழியில் கடைசிமகனான குகன் என அழைக்கப்படும் நல்லையா குகதாஸ்(வயது28) காணாமல் போயுள்ளார். பொலிஸ் தொடக்கம் வனஜீவராசிகள் இராணுவத்துணையுடன் தேடியும் கிடைக்கவில்லை.  இன்றுவரை தேடுகின்றார்கள். என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. தாயார் மகனைக்காணாது ஊனின்றி உறக்கமின்றி அழுதுபுலம்பிக்கொண்டிருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில்;:
எனக்கு 5பிள்ளைகள். 2பெண்களும் 3ஆண்களும். இவர்களில் கடைசிமகன்தான் குகதாஸ். கணவர் ஏலவே மரணித்துவிட்டார். 
இரண்டாம் நாள் காட்டுப்பாதையில் ஆயிரக்கணக்கானோர் பயணித்துக்கொண்டிருந்தோம். நடக்கும்போது முன்பின்னாக நடப்பது வழமை. ஆனால் அன்று இரவு தங்குவதற்காக வெட்டைக்குச்சென்றபோது மகனைக்காணவில்லை. தேடினோம் . பலரிடமும் விசாரித்தோம். பலனில்லை. அங்கு தண்ணீர்த்தாங்கி நிரப்பவந்தர்களிடம் விசாரித்தபோது அவர் நாவலடியில் நிற்பதாகச்சொன்னார்கள்.
ஒருவகையில் மகிழ்ச்சி. மறுநாள் காலை நாவலடிக்குச்சென்றோம். அங்கு அவரைக்காணவில்லை. விசாரித்தபோது எவருக்கும் தெரியவில்லை. பின்னால் நடந்துவரக்கூடும் அல்லது முன்னால் போயிருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் நாம் மனத்தைக்கல்லாக்கிக்கொண்டு முருகனை நினைத்தபடி கதிர்காமத்தை 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அடைந்தோம். அங்கும் தேடினோம். கிடைக்கவில்லை.
அங்கு பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களம் இராணுவம் என்று பலரிடமும் முறையிட்டுள்ளோம். இதுவரை எதுவித தகவலுமில்லை.
இறுதியாக வெண்ணிற காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தார்.  எனது மகன் வாய்பேசாதவர். எனவேதான் நாம் கூடுதலாக பயப்படுகின்றோம். அவருக்கு என்ன நடந்தது? என்று தெரியாமல் பதறுகின்றோம். என்று கூறி அழுதார்.
அவரது மற்றொரு மகனான நல்லையா குமாரதாஸ்(வயது 40) கூறுகையில்:
நாம் சம்பவத்தைக் கேள்வியுற்றதும் ஞாயிறு தொடக்கம் புதன்கிழமை வரை கதிர்காமத்திலே தங்கியிருந்து அவரது புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரத்தை (தமிழ் சிங்கள மொழிமூலம் ) பரவலாக விநியோகித்தோம்.
செவ்வாயன்று வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இராணுவம் சகிதம் வாடகைக்கு ஒரு ஜீப்வண்டியை அமர்த்திக்கொண்டு கதிர்காமத்திலிருந்து மீண்டும் காட்டுப்பாதையுடாக அவர் தவறிவிடப்பட்ட இடம் வரை சென்று தேடினோம்.நாவலடியில் 90இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். அவர்களிடமும் விசாரித்தோம். எந்ததகவலுமில்லை.
கதிர்காமம் பொலிசார் எமது முறைப்பாட்டை ஏற்கவில்லை. கொக்கட்டிச்சோலைப்பொலிசாரிடமம் முறையிட்டுள்ளோம்.
தயவுசெய்து யாராவது இப்படத்தில் காணப்படும் எனது தம்பியைக்கண்டால் 0775566052 எனும் செல்லிடத்தொலைபேசிக்கு அறிவிக்குமாறு மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்கின்றோம். என்றார்.
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை கடந்த 22ஆம் திகதி உகந்தையில் மூடப்பட்டது தெரிந்ததே. அதாவது இறுதிநாள் 22ஆம் திகதி காட்டுக்குள் இறங்கிய இறுதிபாதயாத்திரீகர்கள் இன்று   (26) கதிர்காமத்தை வந்தடைந்தனர். எனவே இனி யாரும் காட்டுக்குள் பயணித்து வருவதற்கு இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.