நாங்கள் விளையாட்டில் மாத்திரமல்ல இம்முறை தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டிகளிலும் பல பதக்கங்களைப் பெற்றுள்ளோம்.

பட்டிருப்பு கல்வி வலயமானது இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் இம்முறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளதாக  வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த மாகாணமட்ட விளையாட்டுப்போட்யில்  பட்டிருப்பு வலயம் கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளமை தொடர்வில் வலயக்கல்வி பணிப்பாளரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் விளையாட்டில் மாத்திரமல்ல இம்முறை தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டிகளிலும் பல பதக்கங்களைப் பெற்றுள்ளோம். விளையாட்டினூடாக 52 பதக்கங்களும், புள்ளி அடிப்படையில்   வலயத்திற்கு 186 புள்ளிகளும் கிடைக்கப்பெற்று கிழக்கு மாகாணத்தில் எமது வலயம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளது. அது மாத்திரமின்றி தேசியமட்ட தமிழ்த்தினப்போட்டியில் 04 பதக்கங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்த வகையில் விளையாட்டு நிகழ்வுகளில் பதக்கங்களைப் பெற்ற பாடசாலைகளின் விபரங்கள் பின்வருமாறு களுதாவளை மகா வித்தியாலயம் 32 பதக்கங்களையும், செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 11 பதக்கங்களையும், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் 04 பதக்கங்களையும், மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் 02 பதக்கங்களையும்,  மண்டூர் 40 அ.த.க.பாடசாலை 01 பதக்கத்தையும், வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயம் 01 பதக்கத்தையும், மகழூர் சரஸ்வதி வித்தியாலயம் 01 பதக்கத்தையும் பெற்று தந்துள்ளது.
அதே போன்று தமிழ்த் தினப்போட்டியில்  மகிழூர் சரஸ்வதி வித்தியாலய மாணவி த.சுதர்ணியா இலக்கிய விமர்சனப்போட்டியில் ஒரு தங்கப்பதக்கத்தையும், தேற்றாத்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் மேடை நாடகத்தில் ஒரு வெள்ளி பதக்கத்தையும், கோட்டைகல்லாறு மகா வித்தியாலய மாணவி த.அனுஸ்ரிகா ஆக்கத்திறன் போட்டியில் ஒரு வெண்கலப்பதக்கத்தையும், பட்டிருப்பு மாகா வித்தியாலய மாணவர்கள் வில்லுப்பாட்டில் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுத்தந்துள்ளனர்.
இவ்வாறாக எமது மாணவர்கள் பலதரப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் இச்சாதனைகளை   நிகழ்த்துவதற்கு மாணவர்களுக்கு ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கிய அதிபர்கள்,ஆசிரியர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், நலன்விரும்பிகள் என அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக இதன்போது தெரிவித்தார்…