தமிழ் பரா விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு

கே.எல்.ரி.யுதாஜித்

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவில் பங்கு கொண்டு அனைத்துத் தரப்பினரும் மாற்றுத்திறனாளிகளின் பாதையில் இணைந்து மாற்றுத்திறனாளிகளையும் சமூகத்தில் ஒரு அங்கத்துவமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் எனமட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஜீவராசா தெரிவித்தார்

எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறும் தமிழ் பரா விளையாட்டு விழா தொடர்பில் மட்டக்களப்பு கமிட் நிறுவன அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களில் ஈடுபட்டு வரும் நாம், வருடாவருடம் அவர்களுடைய பங்கு பற்றலுக்காக தமிழ் பரா விளையாட்டு விழாவினை நடத்திவருகிறோம்.

தமிழ் பரா விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நடை என்ற மாபெரும் நடை ஒன்றினை கடந்த 8ஆம் திகதி காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தியிருந்தோம். கடந்த 3 வருடங்களாக மாற்றுது;திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவினை நடத்தி வருகிறோம் என்ற வகையில் இவ்வருடமும் இம்மாதம் 28, 29ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். வெபர் மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதே போன்று 29ஆம் திகதி இரவு நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் இனை நிகழ்வினை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதனை பாடகர்கள் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நடத்தவுள்ளோம்.

மாற்றுத்திறனாளிகளின் செயற்பாடுகளை எமது மக்களும் காணவேண்டும் எதிர்காலத்தில் அவர்களுக்கு மக்கள் பக்கபலமாக நின்று உதவிகளை வழங்கவேண்டும் எங்களுடைய சாதனைகளுக்கு மென்மேலும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்விழாவினை மிகவும் சிறப்பான முறையில் சமூக சேவைத்திணைக்களத்தின் ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்துள்ளோம் எமது சமூகத்தினரும் இந்த நிகழ்வைக்கண்டு களிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

அமைப்பின் செயலாளர் ரி.அரிதாஸ், ஆலோசகர் எஸ்.பரமானந்தம், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி உள்ளிட்டோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.