கிழக்கின் தொண்டராசிரியர்களின் பிரச்சினைகள்அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும்

தொண்டராசிரியர்களின் மேன் முறையீடுகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர் தெரிவின் போது தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நிரந்தர நியமனத்தை பெற்று தருமாறும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் நேற்று புதன் கிழமை (25) கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஆளுநரின் மக்கள் சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தனர்.

அக்கோரிக்கையினை தான் வரவேற்பதாகவும், இதுவரை காலமும் ஒரு தடவைக்கு பதிலாக பல தடவைகள் தொண்டராசிரியர்களின் முறைப்பாடுகளையும், பிரச்சினைகளையும் ஏற்றுக்கொண்டு மேன்முறையீடு செய்ததாகவும் இதன் போது அவர் தெரிவித்தார்.

ஆனாலும் ஆகஸ்ட் மாதத்துடன் தொண்டராசிரியர்களின் அனைத்து மேன்முறையீடுகளும் நிறைவடையும் எனவும் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களின் பெயர் விபரங்களை வெளியிட உள்ளதாகவும் ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் யுத்த காலப்பகுதியில் ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைகளில் எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தொண்டராசிரியர்களை தான் பாராட்டுவதாகவும்,நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து தொண்டராசிரியர்களுக்கும் மிக விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

(DC)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-