காணி வழங்கும் நடவடிக்கையை நிறுத்தவும் – யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை பகுதியில் விலங்குகள் சரணாலயம் அமைக்க 2500 ஹெக்டேயர் காணி வழங்கும் சடவடிக்கையினை நிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை பகுதியில் 2500 ஹெக்டேயர் நிலப்பரப்பை ஒரு தனி நபருக்கு விலங்குகள் சரணாலயம் அமைக்க குத்தகைக்கு வழங்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளபடும் இரகசியமாக நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 

கோறளைப்பற்று, தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பிமலையை அண்டியதாக 2500 ஹெக்டேயர் நிலப்பரப்பை ஒரு தனி நபருக்கு குத்தகைக்கு விலங்குகள் சரணாலயம் அமைக்க அரசாங்கம் இரகசியமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிந்துள்ளேன்.

கோறளைப்பற்று, தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வனவிலங்கு சரணாலயம் ஒன்றை அரசாங்கம் அமைப்பதில் தடையில்லை. காரணம் சுற்றுலாத் துறையை விருத்தி செய்யலாம். ஆனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் காணிகளை தனி நபருக்கு குத்தகைக்கு வழங்கி விலங்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை எதிர்க்கின்றோம். அத்துடன் இச்செயற்பாடானது தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் ஒரு செயற்பாடாகும்.

எனவே இரகசியமாக அரசாங்கம் மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கு எதுவித அனுமதியை வழங்க வேண்டாம் என தங்களை கோருவதுடன் இவ் விடயம் குறித்து விரிவாக ஆராய்வதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இதனைத் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.