மீனவர்களுக்கு அனர்த்தப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

 

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பரிவினரால் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் சவுக்கடிப் பிரதேச மீனவர்களுக்கு அனர்த்தப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குச் செயற்பாடொன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

வேகமாக மாறிவரும் வாநிலை, காலநிலை மாற்றத்திலிருந்தான பாதுகாப்பு, அனர்த்த முன்னெச்சரிக்கை, வெப்பமான காலநிலையினால் கடற்கரைப் பிரதேசங்களிலுள்ள காடுகளில் ஏற்பம் தீயிலிருந்தான பாதுகாப்பு, கடல் தொழிலின் போது மீனவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளல், குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவ் கருத்தரங்கில் விளக்கமளிக்கப்பட்டது.

மீனவர்களின் பாதுகாப்பினை நோக்காகக் கொண்டு இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம்.எம்.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.பசீர், மீன்பிடிப்பரிசோதகர் ஏ.ஏ.பரீட், ஆகியோர் விளக்கங்களை வழங்கினர். சவுக்கடி பிரதேச மீனவ அமைப்பின் தலைவர் சி.மரியசீலன், கிராம சேவையாளர் ஜீ;.ஏ.விஜயகுமார், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தவதர்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

காலநிலை மாற்றம் தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக மாறிவருகின்ற நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

அந்த ஒழுங்கில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினர், உள்ளூட்சி உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம்.எம்.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.