மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான கல்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்த முடியும்.

க. விஜயரெத்தினம்)
தொழிநுட்ப யுகத்தில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான கல்வியையும்,அது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சிறந்த கட்டமைப்புக்களுடன் எயிட்ஸ்நோயை எம்சமூகத்தில் இருந்து நீக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரக் திணைக்களமும்,உலக தரிசனம் நிறுவனமும் இணைந்து எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் ஆக்கத்திறன் சித்திரப்போட்டியை நாடாத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(21.7.2018) பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றபோது  உலக தரிசனம் நிறுவனத்தின் மாகாணப் பணிப்பாளர் ஏ.ரமேஸ்குமார்,பாலியல் நோய்தடுப்பு வைத்தியர் Dr.அனுசியா ஸ்ரீசங்கர்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர் வை.சீ.சஜீவன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் :-
இன்று எயிட்ஸ் பற்றிய அறிவை 11 வயதிற்கு மேற்பட்டவர்கள் அறிந்து பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகளையும்,அதன் தாக்கங்களையும் உலக தரிசனம் நிறுவனமும்,பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயமும் மாவட்டத்தில் கருத்தரங்குகளையும்,பொதுக்கூட்டங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.சிறந்த பங்களிப்பு செய்யும் சுகாதாராத் திணைக்களத்துக்கும்,நிறுவனத்தும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையில் 0.01 வீதமானவர்களே எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.எமது நாடு 7வது இடத்தில் இருக்கின்றது.எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.ஒவ்வொரு மாதமும் சிறந்ததொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மாவட்டத்தில் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு சென்றடையும்.

பாடசாலை அதிபர்,ஆசிரியர் சிலர் எமது சமூகத்தில் ஏற்படுத்தும் சமூகப்புரள்வுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கை இராணுவமும்,மாவட்ட சுகாதாரக் திணைக்களமும் இணைந்து டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டிருப்பதை அறிந்திருக்கின்றேன்.இவ்வாறான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளுவதன் மூலம் எமது சமூகத்தை அபாயகரமான நோயிலிருந்து காப்பாற்ற முடியும்.இன்றைய சித்திரப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற வந்திருக்கும் மாணவர்கள் கிராமப்புற மாணவர்களே ஆகும்.எல்லைப்புற மாணவர்கள் கல்வியில் உத்வேகத்துடன் செயற்படுகின்றார்கள்.அவர்களை நான் பாராட்டுகின்றேன்.இதன்போது 68 மாணவர்களுக்கு வெற்றி பெற்றிருந்தார்கள்.முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகளும்,ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டது.