கொக்குவில் ,சத்துருக்கொண்டான் கிராமத்தை மாநகர கிராமம் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக உள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் மற்றும் சத்துருக்கொண்டான் கிராமத்தை அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே கடந்த காலத்தில் பார்த்தனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் அறாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட எனது மூன்றாம் வட்டாரத்தை உள்ளடக்கும் பகுதியான சத்துருக்கொண்டான், கொக்குவில் கிராமங்களில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களே உள்ளனர்.

இம் மக்கள் 1990ம் ஆண்டு முற்றாக இடம்பெயர்ந்தும் இன்னும் மாநகர சபையின் அபிவிருத்தி காணப்படாது மணல் பாதைகள் அதிகமாகவும், குடிசை வீடுகள் அதிகமாகவும் காணப்படுகின்றது.

இதுவரை காலம் இருந்த மாநகர சபை நிர்வாகமோ, ஆட்சியில் இருந்த கட்சியோ எமது பகுதியை அபிவிருத்தி செய்யவில்லை. மாநகர கிராமம் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக உள்ளது.

எனவே இந்த ஆட்சியிலாவது எமது பகுதி மக்களின் தேவையான வீடமைப்பு, குடிநீர், மலசலகூட வசதி, வீதி புனரமைப்பு என்பவற்றில் அதிக அக்கறை செலுத்தி எமது பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் எங்களை மாற்றான் தாய் பிள்ளைகளாகவே அரச அதிகாரிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பார்த்தார்கள். எனவே எமது பகுதிக்கு வருகை தந்து நேரில் சென்று பார்வையிட்டு எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.