இணக்கத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அவர்களின் இனம் சார்ந்த நலனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தே செயற்படுகின்றனர்

தமிழர் நலனில் அக்கறை இருந்தால் தமிழ் கட்சிகள் கிழக்கு தேர்தலில் ஓரணியில் இணைய வேண்டும்!


-கேதீஸ்-

தொடர் சோதனைகள், இழப்புக்கள், பல்வேறு நெருக்கடிகளுடனும் , அரசியல் புறக்கணிப்புக்களுக்கு மத்தியில் வெறும் வாக்குறுதிகளுடன் மாத்திரம் காலம் காலத்திற்கு காலம் தேர்தல்களை தமிழர்கள் குறைவின்றி எதிர்கொள்ளுகின்றனர்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர் நெருக்குதல்கள் காணி சுரண்டல்கள் அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்புககளிலும் தொடர்ந்து புறக்கணிப்புக்களையும் ,இருப்புக்களை தக்க வைப்பதில் பல்வேறு சாவால்களையும் கிழக்குமாகாண தமிழ் மக்கள் அதிகமாகவே எதிநோக்கி வருகின்றமை வெளிப்படையான உண்மை.

தங்களின் நிலைமைகளை புரிந்துகொள்ளாத அரசியல் தலைவர்களை எண்ணி மனக்குமுறல்களுடன் தங்கள் ஆதங்கங்களை இம்மக்கள் வெளிப்படுத்தியவாறு உள்ளனர்.
கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக தங்கள் கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்துவரும்போதும் அதனை தமிழ் கட்சிகள் தங்கள் கட்சி அரசியலுக்கப்பால் கிழக்கு மாகாண தமிழர்கள் நிலைமையினை புரிந்து செயற்படுகின்றார்களா என்ற கேள்விகளும் எழாமலில்லை.

இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் கடந்த கால தேர்தல்களில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையினை பெற்று வெற்றி பெற்ற தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப செயற்பட தவறியதன் விளைவுகளையும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அவதானிக்க முடிந்தது.

இணக்க அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து த.தே.கூட்டமைப்பு செயற்பட்ட விதமும் விட்டுக்கொடுப்புக்களும் தமிழர்களுக்கு பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் இணக்கத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அவர்களின் இனம் சார்ந்த நலனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தே செயற்படுகின்றனர் தமிழர்கள் பல விடயங்களில் புறக்கணிக்ப்பட்டிருந்தும் த.தே.கூட்டமைப்பு இணக்க அரசியல் என்ற வார்த்தைக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் கிழக்கு மாகாண தமிழர்கள் சந்தித்துகொண்டிருக்கும் சவால்களும் பாதிப்புக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தீர்வு நோக்கியதாகவும் அபிவிருத்தி நோக்கியதாகவும் சமாந்திரமாக நகர வேண்டிய தேவை தமிழர்களுக்கு உள்ளது குறிப்பாக கிழக்கில் அரசியல் பலமற்றிருக்கும் தமிழர்களுக்கெதிராக மாற்று இன அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்கள் மறைக்கமுடியாத உண்மைகளே.

கிழக்கில் இருந்து மத்திய அரசில் எந்த தமிழ் அமைச்சர்களும் இல்லாத நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு கட்சி அரசியலுக்கப்பால் அனைத்து தமிழ் தரப்பும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இந்த வருட இறுதிக்குள் நடைபெறக்கூடிய அறிவிப்புக்கள் வெளியாகி வருவதால் காலம் தாழ்த்தாது கிழக்கு மாகாணசபை தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் விட்டுக்கொடுப்புக்கள் புரிந்துணர்வுடன் தங்கள் கட்சி சுய நலன் சார்ந்த விடயங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒன்றிணைந்து ஓரணியில் இறங்க முடிவுகளை எடுக்க வேண்டும். இதுவே கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஒருமித்து எழும் கோரிக்கையுமாகும்.

இந்த கோரிக்கைகள் கருத்துக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மக்களாலும் பொது அமைப்புக்களாலும் தமிழ் ஊடகங்கள் வாயிலாகவும் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரை ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்படாமல் உள்ளமை வேதனையான விடயமே.

 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஓரணியில் இணைவது தொடர்பான முயற்சிகளின்போது சில கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பான கருத்துக்கள் சில வெளியாகியும் இருந்தன.
கொள்கையளவில் இணக்மில்லாத கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு செயற்படுவது என்ற கருத்து ஒரு பக்கமாகவும் சில கட்சிகள் தனித்து போட்டியிடுவதில் ஆர்வம் காட்டுவதையும் அவதானிக்ககூடியதாக இருந்தன.

இதற்காக அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அல்ல இவைகள் தமிழர் நலனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிடவும் அவர்கள் கட்சிகள் சார்ந்த விடயங்களில் அக்கறை காட்டுவதாகவே உள்ளன.

வடக்கு கிழக்கு இணைவு என்பது தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளில் ஒன்று ஆனால் இந்த விடயங்களை சுட்டி காட்டி தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதில் பின்னிக்க கூறும் காரணங்கள் மக்களை ஏமாற்றுவதாகவே நோக்கப்படுகிறது.

இந்த விடயத்தினை தெளிவாக சொல்வதாக இருந்தால் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் தனியாக நடைபெறுவதும் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் தனியாக நடைபெறுவதுமே இணைந்த வடக்கு கிழக்கு கொள்கைக்கு அப்பால் ஆகும்.கிழக்கு மாகாணசபைக்காக தனியாக நடைபெறும் தேர்தலிலும் வடக்கு மாகாண சபைக்கான தனியான தேர்தலிலும் போட்டியிடும் தமிழ் கட்சிகள் அனைத்துமே விரும்பியோ விரும்பாமலோ இணைந்த வடக்கு கிழக்கு கொள்கைக்கு அப்பாலாகவே போட்டியிட்டனர் போட்டியிடவுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கட்சிகளுக்கிடையில் கொள்கையில் வேறுபாடு உள்ளது என்ற காரணங்கள் கூறி இணைவதற்கு பின்னிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல கிழக்கு மாகாண தமிழர்களின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் செயற்படவேண்டியது அவசியமாகும்.

அரசியல் பலமற்றிருக்கும் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்கொள்ளும் சாவால்கள் இடைவெளிகளுக்கு ஓரளவேனும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால்; கட்சி இலாப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அனைத்து தரப்பும் விட்டுக்குகொடுப்புக்களுடன் செயற்பட்டு தமிழ் மக்களின் ஒருமித்த கோரிக்கையான அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் இணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.  இதுவே தமிழ் கட்சிகள் என்று கூறுவதிலும் தமிழர் நலன் சார்ந்தவர்கள் என்று கூறுவதிலும் நியாயமும் தமிழர் நலனில் அக்கறையும் உள்ளதாக இருக்கும்.

எனவே தமிழர் நலனில் அக்கறை இருந்தால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரணியில் இணைய வேண்டும் இது அவசியமும் அவசரமானதுமாகும்.