புலம் பெயர் பிச்சைகளே , தாயகத்திலுள்ள மக்களை வாழ விடுங்கள்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வந்த அனைவரும் பிச்சைக்கார வாழ்கையையே ஆரம்பித்தார்கள். சிலர் கல்விக்காக வந்திருப்பார்கள். சிலர் உறவினர்கள் அழைத்து வந்திருப்பார்கள். சிலர் மணமுடித்து வந்திருப்பார்கள். அநேகர் அகதிகளாக வந்திருப்பார்கள். எப்படி எப்படியெல்லாமோ வந்திருப்பார்கள்.

இப்படி வந்த அனைவரும் ஏதோ எலிசபெத் மகாராணியின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் போல கர்வமாக இன்று எழுதுகிறார்கள். ஊர் மக்கள் ஏதாவது பெறுவதை பிச்சை எடுப்பதாக சொல்லி தடுக்கிறார்கள். ஆனால் இவர்கள் எப்படி வந்தார்கள்? எப்படி பிச்சை எடுத்தார்கள்? எடுக்கிறார்கள் எனும் உண்மைகளை மறந்தே போனார்கள். இந்த உண்மையை யாராவது உணர்கிறீர்களா?

இப்போது நீங்கள் வளம் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் அனைவரும் பிச்சசைக்காரர்களாக , வாழும் நாட்டவர்களிடம் கையேந்தியவர்கள் , கையேந்துவோர் என்பதை மறக்க வேண்டாம். இதுவே மனச் சாட்சியின் உண்மை!

கமியூனிசம் பேசுபவனெல்லாம் , முதலாளித்துவ தேசங்கள் கொடுக்கும் உதவி பணத்தில் வாழ்கிறான். இனவாதம் பேசுபவனெல்லாம் , நாமெல்லாம் மனிதர்களே என புலத்தில் பொய் பேசி வாழ்கிறான். இந்துக்கள் – முஸ்லீம்கள் – பௌத்தர்கள் – பாவாடைகள் (கிறிஸ்தவர்கள்) என ஊரில் உள்ளோரை அடிபட உற்சாகமூட்டும் அனைவரும் மேற்கத்திய – ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளில், மதமல்ல, மனிதமே சிறந்தது என சொல்லி ஏமாற்றி வாழ்கிறான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்?

இங்கே தமிழனைக் காட்டிக் கொடுத்து உயர்வடைகிறான். தமிழனை ஏமாற்றி பிழைக்கிறான். வீட்டில் எதிர்த்து பேச வக்கில்லாதவனாக வாழ்கிறான். போராட்டத்துக்கு என சுரண்டிய காசில் குபேரனாக கொண்டாட்டம் நடத்துகிறான். இவர்கள்தான் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள்?

புலத்து அரசியலில் ஈடுபடுவோர் தமிழரின் விடிவுக்காக போராடப் போவதாக சொல்லி பொய்யுரைத்து தமிழர் வாக்குகளை வாங்கும் ஒரு கூட்டமும் புலத்தில் இருக்கிறது. இவர்கள் உலகம் அழியப் போகிறது என மதமாற்றம் செய்வோருக்கு ஒப்பானவர்கள். வெள்ளைக்காரன் என்ன ஈழம் வாங்கிக் கொடுக்கவா அரசியல் நடத்துகிறான்? என்ன ஒரு ஏமாற்றுத்தனம்? அதையும் நம்பும் புலம் பெயர் கூட்டம்தான் அதிகம். இவர்கள் பிரமிட் வியாபாரிகளை நம்பும் மடையரை போன்றவர்கள். இவர்கள்தான் புலத்து தேசிய அறிவாளிகள். என்னவொரு கொடுமை!

இலங்கை அரசு, கொடுக்கும் அனைத்தையும் பிச்சை போடுவதாக தடுக்க முனையும் , நீங்கள் அனைவரும் , புலம் பெயர் நாடுகளில் மட்டுமல்ல, வரும் வழியில் கூட பிச்சை எடுத்தவர்களே , இன்னும் பிச்சை எடுப்பவர்களே!

இலங்கை மட்டும் உங்கள் போராட்டத்தை நசுக்கவில்லை. முழு உலகமுமே உங்கள் போராட்டத்தை நசுக்கியது. அதை நீங்களே சொல்கிறீர்கள். அந்த உலகத்தில் வாழ்ந்து பிச்சை எடுக்கும் நீங்கள் அனைவரும் , ஏன் இலங்கை கொடுப்பதை தடுக்கிறீர்கள்?

புலம் பெயர்ந்து வந்தோர் எவரும், வந்த நாட்டு உரிமையாளர்களாக வரவில்லை. அனைவரும் கள்ளத் தோணிகளே! ஆனால் நீங்கள் , அடுத்தவரை கள்ளத் தோணிகள் என ஒரு காலத்தில் நையாண்டி செய்தவர்களே? அதற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனையா இது , உங்களை கள்ளத் தோணிகளாக்கியது.

புலம் பெயர்ந்த எவரும் தங்கள் விருப்பமான அல்லது தேவையான விதத்தில் வாழ்ந்ததில்லை. வாழவும் முடியாது. வாழும் நாடு விரும்பிய விதத்திலேயே வாழ வேண்டி வந்தது.வாழ வேண்டி உள்ளது. அதை எவருமே எதிர்க்கவில்லை. காரணம் அண்டி வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இதுவும் அடிமை வாழ்வுதான். அந்த அடிமை வாழ்வுக்கு எதிராக, இங்கு போராட சக்தியில்லை. அதனால் இன்னொருவராக ஊரிலுள்ளவர்களை போராட வைத்து சுகம் காணுகிறீர்கள். இது ஒரு மனநோய்தான்.

உன்னையே அடிமைப்படுத்தி, நாட்டையே பிரித்துக் கொடுத்து, உன் போராட்டத்தை அழிக்க அத்தனை உதவிகளையும் செய்த மேற்குலகில் சொகுசாக வாழ்ந்து கொண்டு , நாட்டில் உள்ளவர்கள் வாழ்வை ஏன் கேள்விக் குறியாக ஆக்குகிறாய்? நீயே அடிமை. நீயே பிச்சை. உனக்கு என்ன தகுதி அவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு?

புலம் பெயர் பிச்சைகளே , அங்குள்ள மக்களை வாழ விடு!

நன்றி

Ajeevan Veer