உன்னிச்சை குளத்தை அண்டிய பல கிராமங்களுக்குகுடிநீர்

உன்னிச்சை குளத்தை அண்டிய பல கிராமங்களுக்கு இன்னும் குடிநீர் வழங்கப்படாத நிலையில் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள தூரப் பிரதேசங்களுக்கு குடிநீரை கடத்தும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உன்னிச்சை குளத்தை அண்டிய கிராமங்களுக்கு விரைவில் குடிநீரை வழங்கக் கோரும் பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று 20.07.2018 அன்று மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டது.

இந்த ஒத்திவைப்பு பிரேரணையினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் வழிமொழிந்தார்.

இந்த ஒத்திவைப்பு பிரேரணைபிரேரணை மீது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் உன்னிச்சை குளத்தை அண்டிய பல கிராமங்களுக்கு இன்னும் குடிநீர் வழங்காமல் காலம் கடத்துவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்களை மேலும் ஏமாற்றுவதாகும் என்று கூறியதோடு, நீண்ட காலத்திற்கு பொறுமை காத்த அவர்கள் மேலும் காத்திருக்கும் பொறுமையினை இழந்துள்ளார்கள் என்றும் இந்நிலை தொடர்ந்தால் பிரதேச மக்கள் போராட்டத்தில் குதிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

பிரேரனையினை வழிமொழிந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் உன்னிச்சை குடிநீர், அதன் சொந்தக்காரர்களுக்கு வழங்கப் படாமல் இருப்பதையும், பல கிலோ மீற்றர்கள் தாண்டி, கல்குடா தொகுதியின் பாசிகுடாவில் உள்ள கோட்டல்களுக்கு கொண்டு செல்லப் படும் உன்னிச்சை குடிநீர் வழியில் உள்ள ஒரு கிராமத்துக்கு கூட வழங்கப் படாமை குறித்தும் தனது விசனத்தை தெரிவித்தார்.

இந்த ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பாக பதிலளித்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்கள் தாம் இவ்விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், அடுத்த சில மாதங்களுக்குள் குறிப்பிடப்பட்ட கிராமங்களுக்கு நீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததோடு நெல்லிக்காடு கிராமத்தின் ஊடாக ஆயித்தியமலை உன்னிச்சை கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகும் எனவும் கூறினார்.