மட்டக்களப்பில் வெளிநடப்பு செய்த விடுதலைப்புலிகள்

0
755

மட்டக்களப்பு மாநர சபையின் 6ஆவது அமர்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் மாநாகர சபையின் சட்ட திட்டங்களை மீறி ஊடக அறிக்கை வெளியிட்டமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக நடத்தப்பட்ட விவாதத்தின் போது குறித்த கட்சியின் உறுப்பினர்கள் ஐவரும் இந்த வாக்கெடுப்பை தாங்கள் முற்றாக நிராகரிப்பதாகக் கூறி வெளிநடப்புச் செய்தனர்.
இந்த வெளிநடப்பின் போது குறித்த கட்சி உறுப்பினர்கள் சபை விதிகளை மீறி அவதூறுகளைப் பேசியதாகக் கருதப்பட்டு இந்த உறுப்பினர்கள் மாநகர சபையின் ஒரு அமர்வில் கலந்து கொள்வதற்குத் தடை விதிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த 6வதுஅமர்வு வியாழக்கிழமை காலை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் கூடியது.
இதன்போது மாநகர எல்லைக்குள் முன்னாள் மேயர்களின் சேவைகளைக் கௌரவித்து வீதிகள் மற்றும் பொது இடங்களுக்கு அவர்களின் பெயர்களைப் பொறிப்பதென்றும் தமிழ் மொழியை கடுமையாக அமுல் நடத்துவதென்றும் சட்ட ரீதியற்ற கட்டடங்களுக்கு உரிய அனுமதியைப் பெறச்செய்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்துடன், மாநகர எல்லைக்குள் பிரத்தியே வகுப்புக்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் போயா மற்றும் ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுப்பதென்றும் உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதியால் உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 50 லட்சம் ரூபா ஒதுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற கோருவதெனவும், திருப்பெருந்துறையில் செயற்படும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் தீர்வு கிடைக்கும் வரை அவுஸ்திரேலியா நிறுவனம் வவுணதீவு பகுதியில் குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினை ஆரம்பிக்கும் வரை அதனைத் தொடர்ச்சியாகப்பயன்படுத்துவதெனவும் தாமரைக்கேணி பகுதி மக்களின் நன்மை கருதி வாசிக சாலைக்கட்டடம் ஒன்றினை நிறுவுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.