இன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகனாலயத்தின்  வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இன்றுடன் தமிழர் சிங்களவர் வாழும் பட்டிதொட்டியெல்லாம் இவ்விரு ஆலயங்கள்தான் பேசுபொருளாகவிருக்கும். அத்துடன் களைகட்டும்.
கதிர்காமம்
ஆறுபடைவீடு கொண்ட திருமுருகனின் ஏழாவது படைவீடாகத் திகழ்வது கதிர்காமத்திருத்தலம். இது இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் உடையது.
கதிர்காமம்  ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
 
கதிர்காமம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் சில சமயத் தலங்களில் ஒன்றான இது,சிங்களவர்,பௌத்தம், சோனகர், தமிழர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் போற்றப்படுகிறது.
 
ஈழத்தமிழரின் தொன்மையான வாழ்வியல் அடையாளத்தின் குவிமையமாகத்திகழ்வது கதிர்காமம். மூர்த்தி தலம்தீர்த்தம் என முச்சிறப்புவாய்ந்த கதிர்காமத்திருத்தலம் உள்நாட்டில் இனமதபேதமற்று அனைவரும் சங்கமிக்கும் புனித சமாதான பூமியாகும். அதேவேளை வெளிநாட்டவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் திருத்தலமாகும்.
 
இதனை ஏமகூடம் பூலோககந்தபுரி வரபுரி சகலசித்திகரம் பஞ்சமூர்த்திவாசர் பிரம்மசித்தி அகத்தியபிரியம் சித்தகேத்திரம் கதிரை ஜோதீஸ்காமம் என்றும் அழைப்பர்.
தமிழரின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாக  அதனை பறைசாற்றி நிற்கும்  மறைக்கமுடியாத எச்சமாகத்திகழும் கதிர்காம கந்தன் ஆலயம் குன்றக்குமரனின் ஏழாவது படைவீடாக உலகத்தமிழர்களால் உவமிக்கபடுகின்றது.
 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின்  வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இம்முறை இன்று  13ஆம் திகதி வெள்ளிக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இக்கொடியேற்றம் கதிர்காம வளாகத்திலுள்ள பால்குடிபாவா பள்ளிவாசலில் இடம்பெறுவதை இவ்வண் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.
 
உகந்தமலை!
 
மட்டக்களப்பு மாநிலத்தில் மூன்று மலைக்கோவில்கள் உள்ளன. தாந்தாமலை சங்குமண்கண்டிமலை உகந்தமலை ஆகியன.இவற்றுள் மிகவும் தொன்மைவாய்ந்தது உகந்தமலை.இது 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்தது.
 
முருகனுக்கு உகந்த மலை உகந்தமலை என்பர்.திரைச்சீலை திறக்காமல் பூசைகள் நடைபெறும் ஆலயம் இது. மலை உச்சியில்ஏழு வற்றாத நீர்ச்சுனைகள் இருப்பது இவ்வாலயத்திற்கு மேலும் வனப்பூட்டுபவையாக உள்ளன. இராவணன் பூகாரம்பம் செய்து பாவம் தீர்த்த ஆலயம் இது. இங்கு தலவிருட்சமாக வெள்ளைநாவல் மரம் உள்ளது. இது மலையடிவாரத்தில் உள்ளது.
 
மட்டக்களப்பு கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் பாணமையூடாக சென்று பின்னர் வனாந்தரத்தினூடாக 17கி.மீ. சென்றால் மனோரம்மியமான சூழலில் இயற்கையாக அமையப்பெற்றுள்ள உகந்தமலையை அடையலாம்.
பொத்துவிலையடுத்துள்ள லாகுகலைப்பிரதேச செயலாளர் பிரிவிலும் பாணமை பிரதேசசபைப்பிரிவிலும் அமையப்பெற்றுள்ள உகந்தமலை முருகனாலயத்திற்கு 40ஏக்கருண்டு.
 
கிழக்கே ஆர்ப்பரிக்கும் கடல் சூழ அடர்ந்த வனாந்தரம் நீர்நிலைகள். மத்தியில் கிறங்கவைக்கும் மலைத்தொடர். சதா விடாது வீசும் தென்றல். இத்தகைய மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள உகந்தமலையில் வடிவேல் குன்றமும் நீர்ச்சுனைகளும் மக்களை கவர்ந்திழுக்கின்றன.
குன்றம் எறிந்த குமரவேல் தனது உடல் பெருக்கி வாழ்வு உயர்த்திநின்ற அவுணகுல மன்னனை உரங்கிழித்தபின்னர் எறிந்த வேலானது பல்பொறிகளாகியதென்றும் மீண்டுவந்த அத்தகைய வேற்படைக்கதிர்களில் முதன்மையானது இங்கே (உகந்த) தங்கிற்று என்று ஜதீகம் கூறுகின்றது.
 
தொடர்ந்து 15நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.15நாள் திருவிழாவின்பின்னர் ஜூலை 28ஆம் திகதி சனிக்கிழமை  தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
அன்னதானம்!
கொடியேற்றதினமான இன்று தொடக்கம் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதி மற்றும் தெய்வயானைஅம்மனாலய விடுதியிலும் மற்றும் காரைதீவு உகந்தை யாத்திரீகர் விடுதியில் அன்னதானநிகழ்வு தொடர்ந்து இடம்பெறும். இன்னும் சில மடங்களிலும் அன்னதானம் இடம்பெறும். 
 
நேற்று (12) வியாழக்கிழமை முதல் கதிர்காம இந்து யாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரின் அன்னதானம் ஆரம்பமாகியது என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.
 
17வது வருடமாக தொடர்ந்து இவ்வன்னதான நிகழ்வை நடாத்திவரும் ஞானசுந்தரம் கதிர்காமத்திலிருந்து தெரிவிக்கையில்:
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு பல ஆயிரக்கணக்கானோர் இங்குவருகைதந்துள்ளனர். வேல்சாமி தலைமையிலான குழுவினரும் வந்துள்ளனர்.
 
அதனால் நேற்றே(12) அன்னதானத்தைத் தொடங்கியுள்ளோம்.
தொடர்ந்து தீர்த்தம் நிறைவடையும்வரை மதியம் இரவு அன்னதானமும் தேநீரும் இந்த விடுதியில் வழங்கப்படும்.
எமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலாளர் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
 
நாம் திருக்கேதீஸ்வரத்திலும் அதேவேளை கதிர்காமத்திலும் இதனை பல்லாண்டுகாலமாகச்செய்துவருகின்றோம்.அதற்கு உதவும் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.
 
மரக்கறிவிலைகள் உச்சக்கட்டத்திலிருந்தபோதிலும் எமது அன்னதானம் வழமைபோன்று தொடர்ந்து எவ்விதகட்டுப்பாடுமில்லாமல் வழங்கப்படும். என்றார்.
போக்குவரத்து
விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் அடியார்களுக்கான சகல வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதென்றும் ஆலயநிருவாகங்கள் தெரிவித்தன.
கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்கும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கல்முனைச்சாலை அத்தியட்சகர் வெள்ளத்தம்பி ஜௌபர் தெரிவித்தார். கல்முனை உகந்தை ஒருவழிப்பயணக்கட்டணமாக 315ருபா அறவிடப்படுகின்றது. ஆசனப்பதிவுக்கட்டணமாக 30ருபா. எனவே மொத்தமாக 345ருபா அறிவிடப்படுவதாகக்கூறும்  அவர் கல்முனை கதிர்காமம்  ஒருவழிப்பயணக்கட்டணமாக 402ருபா அறவிடப்படுகின்றது. ஆசனப்பதிவுக்கட்டணமாக 30ருபா. எனவே மொத்தமாக 432ருபா அறிவிடப்படுவதாகவும்  தெரிவித்தார்.
குழுக்களாக பதிவுசெய்து தனியாக பஸ்ஸைக்கொண்டுசெல்லவும் வசதிசெய்யப்பட்டுள்ளது.
 
 
இதேவேளை கதிர்காம ஆடிவேல் உற்சவத்திற்கென யாழ்ப்பாணத்திலிருந்து 56நாட்கள் பாதயாத்திரையிலீடுபட்டு தற்சயம் வீரையடியில் தங்கியிருக்கின்ற வேல்சாமி தலைமையிலான குழுவினரும் மற்றும் 3000பேரும் நேற்று (12) செல்லக்கதிர்காமத்தைச்சென்றடைந்து கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர்.
 
அதுஅவ்வாறிருக்க இன்று (13) உகந்தைமலை முருகனாலய கொடியேற்றத்தின்பின்னர் காட்டுப்பாதையினூடாக கதிர்காமம் நோக்கிபாதயாத்திரையில் பயணிக்க அங்கு சுமார் 4000பேரளவில் தங்கியிருப்பதாக ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவிக்கிறார்.
 
இன்றிலிருந்து எதிர்வரும் 28ஆம் திகதி தீர்த்தோற்சவம் வரை இலங்கையில் கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் மகிமையும் கதைகளும்தான் பேசுபொருளாகவிருக்கும் என நம்பலாம்.
 
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜ