திருமலையில் உப்பளத்திற்கு நிலம் மீனவர்கள் பாதிப்பு.

பொன்ஆனந்தம்

திருகோணமலை குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கும்புறுபிட்டி சின்னக்கரைச்சைப்பகுதியில் உப்பளம் அமைக்கும் நடவடிக்கை தனியார் கம்பனி ஒன்றினால் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கு அங்கு வாழும் மீனவர்கள் தமது எதிர்ப்பை இன்று காலை வெளியிட்டனர்.

இதுதொடர்பான பொதுமக்களுடனான கூட்டமொன்று கும்புறுபிட்டி பலநோக்குமண்டபத்தில் நடைபெற்றது. இன்று காலை 9.00மணியளவில் நடந்த இந்தக்கூட்டத்தில் குறித்த தனியார்கம்பனியின் பிரதிநிதிகள் பலரும் வருகைதந்து மீனவர்களுக்கு தமது விளக்கத்தை அளித்தனர்.

இக்கூட்டத்தில் 60இற்கும் அதிகமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

ஆயினும் கூட்டத்தின் இறுதியில் இத்திட்டத்தை தாம் எதிர்பதாக அங்கு கலந்தகொண்டமீனவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கும்புறுபிட்டி “வேலப்பன”; மீனவர்சங்கத்தின் தலைவரும் கிராம அபிவிருத்திச்சங்க செயலாளருமாகிய எஸ்.கருணாநிதி குறிப்பிடுகையில்,

சின்னக்கரைச்சைப்பகுதியில் 2013ம்ஆண்டு சுமார் 420 எக்கர் வரை காணிகள் தனியார் கம்பனி ஒன்றிகு ஒதுக்கப்பட்டு உப்பளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனை எமது மீனவர்கள் பலமுறை பல்வேற போராட்டங்களை நடாத்தி எதிர்ப்புத்தெரிவித்தனர்.

இதற்கான பல அனுமதிகளை பொதுமக்களின் விருப்பமின்றி அரசாங்கம் வழங்கியதாக கூறப்படுகின்றது.யுத்தம் நிறைவடைந்த அச்ச சூழலில் பொதுமக்களின் முறையான அனுமதி பெறாமல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேபோன்று தான் “றைகம்” நிறுவனத்திற்கு பெரிய கரைச்சைப்பகுதியில் 2010இல் சுமார் 1800ஏக்கர் நிலம் உப்பளத்திற்காக வழங்கப்பட்டது.

அதனால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. அவ்வாறே மேலும் ஒரு உப்பளத்தை சின்னக்கரைச்சையில் அமைக்க எடுத்த நடவடிக்கையை எமது மீனவர்கள் விரும்பவில்லை. 2013இல் பல வெகுஜனபோராட்டங்களையும் மக்கள் நடாத்தி எதிர்ப்பை வெளியட்டனர்.

இந்நிலையில் இந்நடவடிக்கை தொடர்பாக மீழவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த கம்பனியின்சார்பில் பலர் இன்று வந்து கூட்டமொன்றைநடாத்தினர் . தாம் முறையாக அனுமதிகள் பெற்றிருப்பதாக தெரிவித்தனர்.

ஆயினும் இங்கு கலந்துகொண்ட எமது மீனவர்கள் இந்த திட்டத்தை விரும்பவில்லை எனவே இதுவிடயத்தில் பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் அமைப்புக்கள் நடவடிக்கைஎடுக்க முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.எமது வளங்கள், வாழ்வாதாரங்களை பாதுகாக்க உதவவேண்டும் எனவும் தெரிவித்தார்.