ஆயிரம் நாட்களைச் சிறையில் பூர்த்திசெய்த பிள்ளையான்!

அவரைச் சிறைப்பிடித்து கிழக்கை தாரைவார்த்ததே கூட்டமைப்பு செய்த சாதனை.
காரைதீவு  நிருபர் சகா
தமிழீழ கனவோடு போராட்டத்தில் இணைந்து தமிழ்மக்களுக்காக களமாடியவரே கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன். அன்று சிறந்த போராளியாக மண்காக்க புறப்பட்டு கிழக்கில் ஜனநாயக பாதையை ஏற்படுத்தி தொடர்ந்தும் கிழக்கு மண்ணை தன்மானத்தமிழனாய் தனியொருவனாக செயற்பட்ட வேளையிலே இன்று சிறைப்பிடிக்கப்பட்டு ஆயிரம் நாட்களை தாண்டியுள்ளது.
 கிழக்கில் ஜனநாயகத்தை உருவாக்கி தமிழ்மக்களுக்கென நிரந்தரமான அரசியல் பாதையை காட்டிய தலைவனை சிறைப்பிடித்து தமிழ்மக்களுக்கான அபிவிருத்தியை தடுத்ததே தமிழ்தேசிய கூட்டமைப்பினர் செய்த சாதனையாகும்.

இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறையிலடைக்கப்பட்டு ஆயிரம் நாட்களை கடந்துள்ள நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும் காரைதீவு பிரதேசசபையின் சுழற்சி முறையிலான உறுப்பினருமாகிய க.குமாரசிறி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 இவருடைய விடுதலை சம்பந்தமாக கூட்டமைப்பின் தலைவர் மௌனம் காப்பது ஏன்? 2015 ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது கிழக்கு மாகாணசபை ஆட்சிலும் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது தமிழ்முதலமைச்சரை கூட்டமைப்பு பெறவேண்டுமெனவும் அதற்காக தான் நிபந்தனையற்ற ஆதரவை தருவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிடம் பிள்ளையான் கேட்டிருந்தார். நடந்தது என்ன? கிழக்குமாகாணம் தாரைவார்க்கப்பட்டது.
கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கிழக்கில் கூட்டமைப்பிற்கு சவாலாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வெற்றிபெற்றது. அப்போதுகூட வாருங்கள் இணைந்து ஆட்சியமைப்போம் என தமிழ்மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் செயலாளர் கூட்டமைப்பின் தலைவருக்கு கடிதம் மூலம் ஆதவு வழங்கினார்.
 கடைசியில் நடந்தது என்ன? சில சபைகளின் உபதவிசாளரை தமிழர்கள் இழந்தனர். இவ்வாறான வரலாற்று துரோகங்கள் மூலம் கூட்டமைப்பினர் எதனை சாதிக்கப்போறார்கள் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. ஆயிரம் நாட்களென்ன இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் கிழக்குமண்ணை நேசித்த தலைவர் சிறைமீண்டு வருவார். இதுவே கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்புமாகவும் உள்ளது.
வீரவசனமும் அடுக்குவசனமும பேசிப்பேசி மக்களைஉசுப்பேற்றி அவர்கள் சொகுசாக வாழ்கிறார்களே தவிர மக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தெரிவான எம்.பி.மார் மக்களைத் திரும்பிப்பார்க்கிறார்களில்லை.தமிழ்க்கிராமங்கள் சீரழிகின்றன. மாலைக்கும் விழாவுக்குமா இவர்களை எம்.பியாகத் தெரிந்தது?  அவர்கள் அவர்களது உழைப்பிலே கவனம்செலுத்துகின்றார்கள்.
 
இடையிடையே பத்திரிகை அறிக்கையை மட்டும் விடுவார்கள். அத்தோடு மக்கள்பணி நின்றுவிடும். மக்களைப்பற்றி பற்றி கொஞ்சமும் கவனிக்கிறார்களில்லை. அவர்கள் அம்பாறையை மட்டுமல்ல கிழக்கையும் இழந்தனர். 
 
இன்று வடக்கையும் இழக்கஆரம்பித்துள்ளனர். தமிழ்மக்கள் இன்னும் இவர்களை நம்பினால் கடலில்தான் குதிக்கவேண்டிவரும்.