எல்லைக்கிராம மக்கள் இடம் பெயரவேண்டிய நிலை- இரா.துரைரெத்தினம்.

0
799

.மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பாதிக்கப்படும் பிரிவுகளிலுள்ள மக்கள் இடம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப் படுவார்கள் எனவே யானைகளின் அழிவுகளிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இப்பிரச்சினை தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவரது கடித்தில் மேலுமு; குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவில் வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாகவும் 60ற்கு மேற்பட்ட யானைகள் ஒவ்வொரு நாட்களும் கிராமங்களுக்குள் புகுந்து மாலை 5மணி தொடக்கம் அதிகாலை 6மணி வரையும் விவசாயப் பயிர்களையும், பயன் தரும் மரங்கள் போன்றவற்றை உண்டும், அழித்தும் வருகின்றன.

அத்தோடு குடியிருப்பு வீடுகளை சேதமாக்கியும் வருவதோடு, சிலமனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத் தக்கது.

இச்செயற்பாடானது 2006ம்ஆண்டு தொடக்கம் இன்று வரையும் நடந்து வருவதோடு, அண்ணளவாக யானை தாக்குதலினால் 40ற்கு மேற்பட்டோர் உயிர் இழந்தும், 75ற்கு மேற்பட்டோர் காயமடைந்தும், 300ற்கு மேற்பட்ட வீடுகள் முழுச்சேதமாகவும், பகுதிச்சேதமாகவும் பாதிக்கப்பட்டு மற்றும் விவசாயப்பயிர்கள் அழிவடைந்தும், 3000ற்கு மேற்பட்ட மா, பலா, வாழை, தென்னை, பனை போன்ற பயன்தரக்கூடிய மரங்கள் அழிவடைந்தும் உள்ளன.

கிட்டத்தட்ட 600பேருக்கு மேற்பட்ட விவசாயிகளின் விவயாயச் செய்கை பாதிக்கப்பட்டதோடும், 12 வருடங்களுக்கு மேலாக சுமார் 300ற்கு மேற்பட்டோர் குறைந்தது 75 கிராமங்களில் இரவு நேர காவலில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இம் மாவட்டத்தில் அண்ணளவாக 175 கிலோமீற்றருக்கும் மேல் யானை வேலிகள் அமைக்கப்பட்ட நிலையில் தனிக் கிராமங்களிலுள்ள யானை வேலியைத் தவிர 110 கிலோமீற்றர் நீளமான வேலிகள் குடியிருப்புக்களின் எல்லைப்பகுதியில் (காட்டோரங்களில்) யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவு வேளைகளில் மாலை 5மணிக்கு யானைகள் வேலிகளை உடைத்துவிட்டு கிராமத்திற்குள் நுழைவதனால் யானை வேலிகளிலுள்ள மின்சாரம் குறைந்து விடும். இதைத் தொடர்ந்து யானைகள் அதிகாலை வரை கிராமத்திற்குள் வருவதும், போவதுமாக இருக்கும். பல யானைகள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள சிறிய பற்றைக் காடுகளில் பகல் நேரங்களில் பாதுகாப்பாக தங்கிக் கொள்ளும். கிட்டத்தட்ட ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 60 கிராமங்களில் ஒவ்வொருநாளும் யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.

எனவே யானைகளிடமிருந்து மக்களையும், விவசாயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் யானைவேலிகளுக்கு அருகாமையில் 100 கிலோமீற்றருக்கு பாதுகாப்பு கடமைக்கு 100ற்கு மேற்பட்டவர்கள் இரவு நேரக் காவலில் மாலை 5மணி தொடக்கம் காலை 6மணிவரையும் காவல் கடமைகளில் ஈடுபடவேண்டும்.

காவல் கடமைகளில் ஈடுபடுகின்றவர்கள் இரவு நேரங்களில் கண் விழித்து விட்டு பகல் நேரங்களில் வேலைக்குச் செல்ல முடியாது எனவே இவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யவேண்டும்.

இத்தோடு இரவு நேர காவல் கடமைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு யானைகளிலிருந்து பாதுகாப்பு அவசியமாகும். யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள புதிய கிராமங்களுக்கு தனி யானை வேலிகளை அமைத்தல், குடியிருப்பு பகுதிகளிலுள்ள சிறிய பற்றைக்காடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தல். விவசாயிகளுக்கு விவசாயத்தைப் பாதுகாக்கக் கூடியவாறு யானை வெடிகளை வழங்குதல் அல்லது துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுத்தல்.

எல்லைக் கிராமங்களில் புதிய அலுவலகங்களை அமைத்து இவ் அலுவலகத்திற்கான வெடியை அதிகரித்தல், வாகன வசதி, டோச் லயிற், ஆளனி, மற்றும் ஏனைய விசேட கொடுப்பனவுகளை வழங்குவதோடு, இவர்களுடன் இக் கிராம மக்களும் பணிகளில் ஈடுபடுவதற்கு விசேட திட்டம் ஒன்றை தயாரித்து விசேட கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் குறிப்பிட்ட கிராம மக்கள் குறிப்பிட்டமாத காலத்திற்குள் இடம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப் படுவார்கள் எனவே யானைகளின் அழிவுகளிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள விரைவாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.