செங்கோலை பறிக்க முற்பட்டால் 2 மாதங்கள் பாராளுமன்றம் வரத் தடை

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரினின் புலிக்கருத்து தொடர்பில் நேற்று சபையில் ஏற்பட்ட குழப்ப நிலையில் சபை கூடியிருந்த நிலையில் செங்கோலை பறிக்க முற்பட்ட பிரசன்ன ரணவீர எம்.பிக்கு இரு மாத பாராளுமன்ற தடை விதிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. சபை நடுவில் மோசமாக நடந்து கொண்ட ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரை சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று கடுமையாக எச்சரித்தார். பெயர் குறிப்பிட்டு சபையை விட்டு வெளியேற்ற ​நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரினின் புலிக்கருத்து தொடர்பில் நேற்று சபையில் ஏற்பட்ட குழப்ப நிலையின் போதே அவர் இவ்வாறு எச்சரித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வந்த புதிய நிலையியற் கட்டளையின் பிரகாரம் செங்கோலை பறிக்க முற்படும் எம்.பிக்களுக்கு 2 மாதம் வரை பாராளுமன்ற தடை விதிக்கப்படும். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இது தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய சர்ச்சையின் போது பிரசன்ன ரணவீர எம்.பி செங்கோலை பறிக்க முற்பட்டார்.இந்த இழுபறியையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.