கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பின்னால் கிழக்குத் தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பின்னால் கிழக்குத் தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.
செங்கதிரோன்.த.கோபாலகிருஸ்ணன் வேண்டுகோள்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகளைக் கிழக்கு மாகாணத்தின் தமிழ்க் கிராமங்கள் தோறும் முன்னெடுக்குமுகமாக பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பெற்று பிரதேச செயலாளர் பிரிவுமட்டக் கட்டமைப்புகளை உருவாக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இதுவரை (30.06.2018) அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில், கல்முனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று வடக்கு (வாகரை), மண்முனை தென்எருவில் பற்று (களுவாஞ்சிக்குடியிலிருந்து குருக்கள் மடம் வரையிலான பகுதி), ஏறாவூர்ப்பற்று (செங்கலடி), போரதீவுப்பற்று (வெல்லாவெளி), மண்முனைப்பற்று (ஆரையம்பதி), மண்முனை தென்மேற்கு (கொக்கட்டிச்சோலை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இக்கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொள்வதுடன் “எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து ஓரணியில் போட்டியிட வேண்டும்” என்ற கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தீர்மானத்தை நடைமுறைச் சாத்தியமாக்கும் செயற்பாடுகளைப் பொதுமக்கள் அமோகமாக வரவேற்றுள்ளனர்.

மேலும், பிரதேச செயலாளர் பிரிவு மட்டக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களான சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் மற்றும் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆகியோருடன் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களும் இணைந்து பதில்களை வழங்கிக் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கொள்கை விளக்க உரைகளை ஆற்றிக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் பற்றிய தெளிவூட்டல்களை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

இது குறித்துக் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகையில்,

“மக்கள் ஒன்றுபடத் தயாராகவே உள்ளனர். ஆனால் தலைவர்களும் கட்சிகளும்தான் தங்கள் தனிநபர் மற்றும் கட்சி நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றுபடுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். தங்கள் தங்கள் கட்சிகளுக்குள் செல்வாக்குமிக்க கட்சி முக்கியஸ்தர்கள் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைவதற்குத் தங்கள் கட்சிகளின் தலைமைப்பீடங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். பொதுமக்களும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தைத் தமிழர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டுமானால் எதிர்வரும் கிழக்கு மகாhணசபைத் தேர்தலில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுச் சின்னம் ஒன்றின் கீழ் போட்டியிட்டால் மட்டுமே அது சாத்தியம். சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைய வைப்பதற்குக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பின்னால் அணி திரளவேண்டும். அதற்குத் தமிழ் ஊடகங்களும் பாரிய பங்களிப்புச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். அவர் மேலும் விளக்கம் தருகையில், மக்களுக்காகவே கட்சிகள் தவிர கட்சிகளுக்காக மக்கள் அல்ல என்பதே கிழக்குத் தமிழர் ஒன்றியம் கடைப்பிடிக்கும் ‘அரசியல் அறம்’ என்பதைத் தெளிவுபடுத்தினார்.